வைஃபை ஆன் செய்ததும் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்த செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பான ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Vijay gets Y category security
24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு!
இதன்படி சி.ஆர்.பி.எப். வீரர்கள் 11 பேர் துப்பாக்கி ஏந்தி விஜய் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களில் ஒரு ஷிப்டுக்கு மூன்று பேர் வீதம், மூன்று ஷிப்டுகளுக்கு மொத்தம் ஒன்பது பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். மீதி இருக்கும் இரண்டு பேர் பிஎஸ்ஓ எனப்படும் பர்சனல் செக்யூரிட்டி ஆபிஸர்களாக விஜய்க்கு செயல்படுவார்கள்.

விஜய் இந்தியாவில் அதிக வருமான வரி கட்டும் தனிப்பட்ட பிரபலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஷாருக்கான் அடுத்து விஜய் அட்வான்ஸ் வருமான வரி கட்டும் செலிபிரிட்டியாக இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜய்க்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாகவும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. Vijay gets Y category security
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றி கழக மாநாட்டில் விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்தார். இந்த நிலையில் விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரசியல் ரீதியாகவும் முடிச்சு போடப்படுகிறது.
பாதுகாப்பில் பாலிடிக்ஸா?
இது குறித்து விசாரித்தபோது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.
கடந்த 2024 டிசம்பர் 30ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற புகாரை ஆளுநரிடம் தெரிவித்ததோடு, தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே நேரம் தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை உடனடியாக அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தார்.
விக்கிரவாண்டி மாநாட்டில் ஆளுநர் பதவியே தேவையில்லை என்று அறிவித்த விஜய், இரண்டே மாதத்தில் ஆளுநரை சந்தித்து மாநில திமுக அரசு பற்றி புகார் அளித்தார்.

ஆளுநர் தொடங்கிய ஆட்டம்!
ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது சில நிமிடங்கள் விஜயும் ஆளுநரும் தனியாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஆளுநர், ‘நீங்கள் அதிக அளவு மக்களை கவர்கின்ற செலிபிரிட்டியாக இருக்கிறீர்கள். உங்களது பாதுகாப்பிலும் அக்கறை கொள்ளுங்கள். அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு நிறைய பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்’ என்று கூறி இருக்கிறார்.
அதற்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அப்போது ஆளுநர் தரப்பில், ‘உங்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கும் என்று கருதவில்லை. எனவே மத்திய அரசின் பாதுகாப்பு உங்களுக்கு அளிப்பது பொருத்தமாக இருக்கும்’ என்றும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே அகில இந்திய அளவில் அதிக அளவு வருமான வரி கட்டும் தனிநபர்களில் முக்கியமானவராக விஜய் இருப்பதால், அவர் இப்போது அரசியல்வாதியாகவும் ஆகிவிட்ட நிலையில் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான முன்னெடுப்புகளை ஆளுநர் மாளிகை தொடங்கியது என்கிறார்கள். Vijay gets Y category security
இதுகுறித்து விஜய்யிடமிருந்து முறைப்படியான கடிதம் பெற்று அதற்கு ஆளுநர் மாளிகையும் பரிந்துரைத்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் ஐ.பி. எனப்படும் மத்திய உளவுத்துறை மூலமாக விஜய்க்கான பாதுகாப்பு தேவைகள் பற்றி விசாரித்து அறிக்கை பெற்றது. இந்த செயல்முறைக்காக சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகின. இந்த பின்னணியில்தான் விஜய்க்கு இப்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.
கொள்கை எதிரியின் லென்ஸ்!

கொள்கை எதிரியாக பாஜகவை விஜய் முன்னிறுத்தினாலும், இது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாஜகவின் பிடிக்குள் விஜய் வந்து விடுவாரோ என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
இது போன்ற பாதுகாப்புக்கு உட்படுத்தப்படும் நபர்கள் முழுக்க முழுக்க உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பிலேயே இருப்பார்கள். விஜய் அவர் வீட்டில் யாரை சந்தித்தாலும், தமிழ்நாட்டுக்குள் எங்கு சென்றாலும், வெளியே சென்று யாரை சந்தித்தாலும், எங்கே தங்கினாலும், அவரது அறைக்கு அருகே தங்கியிருப்பவர்கள் யார் யார், அவரை சந்திப்பவர்கள் யார் யார், அவருடைய தினசரி பயணத்திட்டம் என்ன என்பது பற்றிய அனைத்து விவரங்களும் உள்துறை அமைச்சகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பப்படும். Vijay gets Y category security
இது ஒரு வகையில் அமித்ஷாவின் நேரடி கண்காணிப்புக்குள் விஜய் இருப்பது போன்ற நிலை தான். இதன் மூலம் விஜயின் தனிப்பட்ட நகர்வுகள், அரசியல் நகர்வுகள் அனைத்தும் டெல்லியின் லென்ஸ்க்குள் தான் இருக்கும்” என்கிற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் ஆப்.