தவெக மாநாட்டுக்கு போலீசார் இன்னும் அனுமதி கொடுக்காததால், விக்கிரவாண்டியில் மாநாட்டுக்கான பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து கட்சி பணிகளை செய்து வரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இது முதல் அரசியல் மாநாடு என்பதால் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சித் தொண்டர்கள் சுவர் விளம்பரங்கள் வரைதல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல், மாநாட்டுக்கு கட்சி தொண்டர்களை அழைத்துச் செல்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட ஏடிஎஸ்பி திருமலையிடம் மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு கொடுத்தார். அந்த மனுவில் சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தவெக தலைமையில் இருந்து தொண்டர்களை திரட்டுவதற்காக தமிழகத்தை கட்சி நிர்வாக ரீதியாக வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து, வட தமிழகத்தில் இருந்து ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 பேர் என்ற வகையிலும், தென் தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதிக்கு 500 பேர் என்ற வகையிலும் ஆட்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 1.5 லட்சத்துக்கும் மேல் வருவார்கள் என காவல்துறையினர் கணக்கு போட்டு வருகின்றனர்.
கூட்டத்துக்கு வரும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த 75 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநாடு நடத்துவதற்கு 85 ஏக்கர் நிலமும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 160 ஏக்கர் நிலத்தை மாநாட்டின் பயன்பாட்டுக்காக வாடகைக்கு பெற்று அதன் உரிமையாளர்களிடம் அக்ரிமெண்ட் போட்டு வருகின்றனர்.
தற்போது அந்த இடத்தில் மேடை மற்றும் பந்தல் போடுவதற்கான பொருட்கள் எல்லாம் வந்து இறங்கியுள்ளன. மொத்தமாக 1 லட்சம் நாற்காலிகள் போட தவெகவினர் முடிவெடுத்துள்ளனர்.
ஆனால், மாநாடு நடத்த இன்னும் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை தலைமை, விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தும் இடம் பிரதான சாலை பகுதியில் உள்ளதால், இங்கு அனுமதி கொடுக்கலாமா வேண்டாமா என்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.
அதேவேளையில் தவெக மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். காவல்துறை உரிய நேரத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவும் முடிவெடுத்துள்ளனர்.
முன்னதாக மக்களவைத் தேர்தலின் போது விழுப்புரம், கடலூர் ஆகிய இரண்டு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இப்போது விஜய் கட்சி மாநாட்டை இந்த இடத்தில் நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள் .
முதல்வர் பிரச்சாரம் செய்த போதே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததால் சாலைகள் ஸ்தம்பித்தன. அதனால் தவெக மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி கொடுக்குமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
இன்னும் மாநாட்டுக்கு 23 நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேண்டும். மேடை, பந்தல், கழிப்பறை வசதி என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த இந்த 23 நாட்கள் போதாது என்கிறார்கள் தவெக வட்டாரத்தில். இதனால் விஜய் டென்ஷனில் இருந்து வருகிறாராம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி