விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உணவு, தண்ணீர், மருத்துவம், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் எவ்வாறு தயார் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தவெக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்…
குடிதண்ணீர்
மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க… மாநாடு நடக்கும் இடத்தின் இரு திசைகளிலும் இங்கே திண்டிவனம் முதல் விழுப்புரம் வரை சின்தடிக் வாட்டர் டேங்க்குகள் இருபுறமும் தவெக கட்சியால் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பயோ டாய்லெட்டுகள்
மாநாட்டு மைதானத்துக்கு அருகே சுற்று வட்டப் பகுதியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பயோ டாய்லெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்க தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மைதானத்தின் மத்தியில் கிணறு
மாநாட்டு மைதானத்தின் மத்தியில் இரு கிணறுகள் இருக்கின்றன. ஆனால், அந்த கிணறுகளின் வாயை மூடும் வகையில் சுற்றிலும் ஆங்கிள் அடித்து, இரும்பு ஷீட் போட்டு மூடியுள்ளனர். அந்த இரும்பு ஷீட்டின் மேல் 5 டன் வரை வெயிட் வைத்து, தாங்குகிறதா அல்லது விழுந்துவிடுகிறதா என்று சோதனை நடத்திப் பார்த்தனர். ஆனால், 5 டன் வெயிட்டையும் அந்த ஷீட் தாங்கியிருக்கிறது. எதுவும் ஆகவில்லை.
கிணற்றை மூடிவிட்டாலும், அந்த ஷீட் மேல் யாரும் அமரவிடாமல் தடுப்பதற்கு மாநாட்டுத் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டுக்காக தற்காலிக செல் டவர்
லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடும் மாநாட்டில், செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால், நெட்வொர்க் வசதிக்காக ஏர்டெல் தற்காலிக டவர் அமைக்கும் வேலையில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் முதலில் இறங்கினர். அதில் சட்ட சிக்கல் ஏற்பட மீண்டும் சில முயற்சிகளுக்குப் பின் தற்காலிக ஏர்டெல் டவர் மாநாட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
உணவு ஏற்பாடு
அனைவருக்கும் உணவு வழங்கலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உணவு வழங்குவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையால் உணவு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது, மாநாட்டுக்காக அக்டோபர் 27 ஆம் தேதி காலை முதலே தொண்டர்கள் திரள ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் தனியார் உணவுக் கடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன.
மதிய உணவை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளே தங்களது மாவட்ட நிர்வாகிகளுக்கு கவனித்து ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ கேம்ப்
கூட்டம் அதிகமாக வரும் நிலையில், மாநாட்டில் தொண்டர்களுக்கு ஏதாவது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில், தற்காலிக மருத்துவ கேம்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதய நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், ஆர்த்தோ நிபுணர்கள் அடங்கிய ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களும் தயாராக இருக்கிறார்கள் என்று தவெக தரப்பில் கூறுகிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தவெக மாநாடு: கூட்டத்தை ஒழுங்குப்படுத்த ஐந்து எஸ்.பி-க்கள் – அஸ்ரா கார்க் ஆலோசனை!
வெள்ளியங்கிரி மலை ஏறனுமா? ரூ.5,353 கட்டணம்! – கொந்தளிக்கும் பாஜக