உதயநிதியோடு மோதும் விஜய்: பனையூர் சந்திப்பின் பாலிடிக்ஸ் பின்னணி!

அரசியல்

5 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் இன்று (நவம்பர் 20) நடிகர் விஜய் சந்தித்திருப்பது சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் நீண்டகாலமாக அரசியல் களத்திலும் செயலாற்றி வருபவர் என்பதை புறக்கணித்துவிட முடியாது.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் திரட்டி தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தியது, 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தது, 2014-நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவை சந்தித்தது, அப்போது பாஜக பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடியைச் சந்தித்தது என நீண்டகாலமாக அரசியலில் இருப்பவர் நடிகர் விஜய்.

vijay fans meeting today in panaiyur chennai udayanithi

ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து வந்தவர், காவலன், தலைவா, சர்கார் எனத் தனது படங்களுக்குப் பெயர் வைத்து தனிப்பெரும் தலைவனாக உருவாவதை இலை மறை காயாகக் குறிப்பிட்டு வந்தார்.

இதன் உச்சக் கட்டமாகத் தான் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் நல்லாசியுடன் களமிறங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகள் 129 பேர் வெற்றி பெற்றனர். நடிகர் விஜய்யும் அவர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு உத்வேகம் அளித்தார்.

இந்த நிலையில் தான் தற்போது சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு நடத்தியுள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொள்ள இந்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் காலை 8.30 மணிக்கே திரளத் தொடங்கினாலும் மதியம் 1.30 மணி அளவில் தான் நடிகர் விஜய் அங்கு வந்து சேர்ந்தார்.

கூட்டத்தில் 600 மாவட்ட நிர்வாகிகளும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அவர்களுக்காக சிக்கன் மட்டன் எனத் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

vijay fans meeting today in panaiyur chennai udayanithi

கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் பக்தர்களுக்காகத் தனியாக சைவ சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மதியம் 1.30 மணி முதல் நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுப்பதில் மட்டுமே நடிகர் விஜய் கவனம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு ரசிகரிடமு, நிர்வாகியிடமும், ‘நல்லா இருக்கீங்களா… சாப்டீங்களா?’ என்பதுதான் விஜய் பேசிய வார்த்தைகள்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற உள்ள நிலையில் அவருடைய இந்த சந்திப்பு அரசியல் களத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே விஜயின் அரசியல் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மு.க. ஸ்டாலின் 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கருதினார் விஜய்.

’உதயநிதி திமுகவில் முதன்மைப்படுத்தப்படும்போதுதான் நான் நேரடியாக களமிறங்க சரியான தருணமாக இருக்கும்’ என்று விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திருந்தார். இதை கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதே மின்னம்பலத்தில் பதிவு செய்து இருந்தோம்.

vijay fans meeting today in panaiyur chennai udayanithi

அந்த வகையில் தற்போது திமுக-வில் உதயநிதியின் அதிகாரம் அதிகரித்து வரும் நிலையில் அரசியலில் களமிறங்க சரியான தருணத்தை விஜய் கணித்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இனி வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடனும் நடிகர் விஜய் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரான இடைவெளியில் நடைபெற போகும் இந்த சந்திப்புகள் தமிழக அரசியல்வாதிகள் பலரின் மன அமைதியை குலைக்கும் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

வாரிசு படத்துடன் களமிறங்கும் விஜய் ஒரு அரசியல் வாரிசுக்கு எதிராகவும் களமிறங்க முடிவு செய்துவிட்டார் என்பதாக தான் இந்த ஆலோசனை கூட்டத்தை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

வணங்காமுடி, ராபிக்

தொழிலதிபர் விஜய்யை பார்த்து வியந்த பாஜக முதல்வர்

நியூசிலாந்தை வென்ற இந்தியா- 4 விக்கெட் வீழ்த்திய ஹூடா

+1
1
+1
2
+1
1
+1
1
+1
1
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *