மக்கள் விரோத ஆட்சியே திராவிட மாடல் ஆட்சி என்று தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (அக்டோபர் 27) திமுகவை விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, “நமது மக்களை ஏமாற்றுகிற கரப்ஷன் கபடதாரிகளை ஜனநாயக போர்க்களத்தில் சந்திக்கிற நாள் வெகுதூரத்தில் இல்லை. 2026-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போடப்போகிற ஓட்டு ஒவ்வொரு அணுகுண்டாக மாறும்.
இங்கு ஒரு கூட்டம் கொஞ்சகாலமாக யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசுகிறார்கள். இந்த மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்ட் டீலிங் போடுகிறார்கள். இவர்கள் எப்போதும் பாசிசம், பாசிசம் என்று தான் பேசுகிறார்கள். ஒற்றுமையாக இருக்கிற நம் மக்கள் மத்தியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரிவினை பயத்தைக் காட்டி சீன் போடுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?
நீங்களும் அவர்களுக்கு கொஞ்சம் கூட சளைத்தவர்கள் இல்லை. மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதனால் இனிமேல் என்னதான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எங்கள் கட்சி கலரை தவிர வேறு எந்த கலரையும் எங்கள் மீது பூச முடியாது.
இந்த நாட்டையே பாழ்படுத்துகிற பிளவுவாத சக்தி தான் தவெகவின் ஐடியாலாஜிக்கல் எதிரி. அடுத்தது திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் நமது அரசியல் எதிரி.
கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப்போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து. இந்த மண்ணுக்கான மதச்சார்பற்ற சமூநிதிக்கொள்கையை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மருத்துவமனையில் பழக்கமான போக்சோ குற்றவாளி… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
ஐடியாலிஜக்கல் எதிரி பாஜக… அரசியல் எதிரி திமுக: விஜய் அறிவிப்பு!