விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழருக்கு விஜய் வாழ்த்து!

Published On:

| By christopher

நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது.

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் என 2 இடங்களில் தனி சின்னத்தில் (பானை) நின்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது.

அதே போன்று கடைசி நேரத்தில் தங்களது கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அளித்த ஒலிவாங்கி சின்னத்தில் நின்று 8.2 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

இதன்மூலம் இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் இரு கட்சிக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் விஜய், தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் நடந்து வரும் நிகழ்வுகளை கவனித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அவர், விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு : ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு முறைகேடு… மாணவர்களை புறக்கணிக்கும் பாஜக அரசு : பிரியங்கா காந்தி சாடல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share