அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகே வி.சாலையில் நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ’ வாருங்கள் மாநாட்டில் கூடுவோம்… 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கியபோதே போலீஸார் அனுமதி அளிப்பது தொடர்பாக பல்வேறு செய்திகள் உலா வந்தன. 21 கேள்விகள் கேட்டு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதனால், மாநாட்டுக்கு போலீஸ் தடை போடப் பார்க்கிறது என்றெல்லாம் கூட விஜய் கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கினார்கள். ஆனால், போலீஸாரோ, ‘மாநாடு நடக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கின்றன’ என்று ஆட்சி மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பினார்கள்.
இந்நிலையில், ‘விஜய் நடத்தும் மாநாட்டில் எந்தவித பிரச்சினையும் ஏற்படக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் திமுக அரசுதான் இதற்குக் காரணம் என்று அரசியல் ரீதியாக திமுகவைத் தாக்குவார்கள். எனவே விஜய் மாநாடு ஏற்பாடுகளில் அரசுத் துறைகள் மேல் குறை சொல்ல எந்த வாய்ப்பும் அளித்துவிடக் கூடாது’ என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸாருக்கு ஆட்சி மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து போலீஸார் – விஜய் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சமீபத்தில் நடந்த ஏர்ஷோவில் பிரச்சினைகள் ஏற்பட்டதுபோல ஆகிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் போலீசார் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த வகையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மேற்பார்வையில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட டிஐஜிகள், பத்துக்கும் மேற்பட்ட எஸ்.பி.க்கள், பாதுகாப்புப் பணியிலும், போக்குவரத்து சீரமைப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாநாட்டுத் திடலுக்கே நேரடியாக சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும், டிராபிக் வழிகளையும் ஆய்வு செய்தார்.
மாநாட்டின் தலையாய பிரச்சினையாக போலீஸ் கருதுவது டிராபிக்கை தான். ஏனென்றால் சென்னை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே மாநாடு நடைபெறுவதால்… தேசிய நெடுஞ்சாலை அதை ஒட்டிய பகுதிகளில் கடுமையான போக்குரவரத்து நெரிசல் நிச்சயமாக ஏற்படும்.
மேலும், தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்பு மாநாடு நடைபெறுகிறது. எனவே தீபாவளிக்கு சில நாட்கள் முன்பே சென்னையில் இருந்தும் சென்னைக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்பிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் மாநாட்டால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள் போலீஸார்.
சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் நடந்த விசிகவின் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் ஐ.ஜி. அஸ்ரா கார்க்கே நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்தார்.
இந்நிலையில், விஜய் மாநாட்டுக்கு பெரும் கூட்டம் கூடும் என எதிர்பார்ப்பதால், சென்னை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை அக்டோபர் 27 ஆம் தேதி காலை முதல் இரவு வரை ரூட் மாற்றிவிடலாமா என்ற தீவிர ஆலோசனை போலீஸ் தரப்பில் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு செல்லும் வாகனங்கள் வழக்கமாக பைபாஸில் சென்றால்… விழுப்புரம்-முண்டியம்பாக்கம்-விக்கிரவாண்டி என 35 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மாநாடு நாளில் விழுப்புரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்களை கஞ்சனூர்- அப்பம்பட்டு -செஞ்சி-வல்லம்-தீவனூர்-தொள்ளார்-திண்டிவனம் என்ற ரூட்டில் திசை திருப்பிவிட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதனால் வழக்கமான 35 கிலோ மீட்டர் பயணம் 75 கிலோ மீட்டர் பயணமாக உயரும். ஆனால், நெரிசல் குறையலாம் என போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.
இதேபோல சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் வாகனங்களில் கனகர வாகனங்களை திண்டிவனம்-பாண்டிச்சேரி-விழுப்புரம் ரூட்டில் டைவர்ட் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் அதாவது கார்களை திண்டிவனத்தைத் தாண்டியுள்ள கூட்டேரிப்பட்டு- மயிலம்- திருவக்கரை-பெரும்பாக்கம்- திருமங்கம்- துரவி வழியாக விழுப்புரத்துக்கு செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஒருவேளை இந்த சாலையிலும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது என்றால்… மதகடிப்பட்டு வழியாக செல்லும் இன்னொரு வழியில் திருப்பிவிடவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மாநாட்டில் விஜய் தனது அரசியல் ரூட் என்ன என்பதை அறிவிப்பார் என அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கும் நிலையில்… போலீஸாரோ விஜய் மாநாட்டால் அவரது கட்சியினருக்கும், மக்களுக்கும் டிராபிக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரூட் களை மாற்றிவிடும் ஆலோசனையில் தீவிரமாக இருக்கின்றனர்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராணுவ வீரர்கள் கொண்டாடும் ‘அமரன்’ !
30 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த சுப்பையாவுக்கு ரத்தன் டாடா எழுதிய உயில்!