விஜய் புதிய நிபந்தனை… எடப்பாடி அவசர ஆலோசனை!

Published On:

| By Aara

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பதே முதல் வேலை என்றும், திமுகவை தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி அல்ல என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போது கூறி வருகிறார். Vijay condition Edappadi discussion

பாஜகவோடு கூட்டணி இல்லை என்று தெரிவித்து வந்தவர்,  இப்போது திமுகவை தவிர யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தோடு அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், பாஜகவை அடுத்த ஆப்ஷனாகத்தான்  எடப்பாடி வைத்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக  வட்டாரங்களில்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது,

“பாஜகவோடு கூட்டணி சேர்வதில் அதிமுகவுக்கு சில சாதகங்கள் இருந்தாலும் பல பாதகங்கள் இருக்கின்றன.

சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்பது மட்டுமின்றி… கடந்த சில மாதங்களாக திமுக கட்டமைத்து வரும் மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில், பாஜகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கே எதிரி பாஜக என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார். திமுக இதை மிகப்பெரிய பிரச்சார இயக்கமாக முன்னெடுக்கிறது.

இந்த நிலையில் பாஜகவோடு சேர்ந்தால் அதிமுகவும் தமிழ்நாட்டுக்கு எதிரி என சட்டமன்றத் தேர்தலில், திமுக கடுமையாக பிரச்சாரம் செய்யும். இதன் மூலம் தனது ஆட்சியின் நிர்வாக தோல்விகளை திமுக எளிதில் மூடி மறைக்கும்.

இந்த அடிப்படையில் தான் விஜய் தரப்போடும் தொடர்ந்து பேசி வருகிறது அதிமுக.  ஆனால், விஜய்யின் நிபந்தனைகள் புதிது புதிதாக இருக்கின்றன. Vijay condition Edappadi discussion

மிக லேட்டஸ்டாக விஜய் தரப்பிலிருந்து எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்ட நிபந்தனை என்னவென்றால்… ‘நாங்கள் இதுவரை தேர்தலையே சந்திக்கவில்லை என்றாலும்…  25 சதவீத வாக்கு வங்கியை கண்டிப்பாக பெறுவோம். குறிப்பாக புதிய இளம் வாக்காளர்கள் எங்களைத்தான் விரும்புகிறார்கள். சிறுபான்மை வாக்குகளும் விஜய்க்கு வரும்.  கட்டமைப்பையும் பலப்படுத்தி வருகிறோம்.

எனவே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்… எங்களுக்கு 40 சதவிகிதம் இடங்களை  அளிக்க வேண்டும். அது மட்டுமல்ல 2026 இல் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் ஐந்து அமைச்சர்கள் எங்களுக்கு வேண்டும்’ என்பதுதான் விஜய் தரப்பு அதிமுகவுக்கு வைத்திருக்கும் லேட்டஸ்ட் நிபந்தனை.

234 தொகுதிகளில் 40 சதவிகிதம் என்றால் சுமார் 80 தொகுதிகளுக்கு மேல் வருகிறது. இவ்வளவு இடங்களை  விஜய்க்கு கொடுத்துவிட்டு மீதி இருக்கும் இடங்களில்தான் அதிமுகவும் பிற கூட்டணி கட்சிகளும் போட்டியிட வேண்டியிருக்கும். Vijay condition Edappadi discussion

பாஜகவோடு அணிசேர்வதில் அதிமுகவுக்கு இருக்கும் பாதகங்களை தனக்கு சாதகமாக்கி விஜய் தரப்பு இப்படி புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறது.

அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையை நடத்தி வருபவர் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தான். அவர் மூலமாகத்தான் இந்த நிபந்தனைகள் எடப்பாடி தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக விஜய் தரப்பு வைத்திருக்கும் புதிய நிபந்தனைகளை பற்றி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்து வருகிறார் எடப்பாடி.

டிசம்பருக்கு பிறகு தான் கூட்டணி விஷயத்தில் விஜய் முக்கிய முடிவெடுப்பார் என பிரசாந்த் கிஷோர் பேட்டிகளில் கூறி வருகிறார். அதேபோல,  ’பாஜக கீஜக எல்லாம் இப்ப கேக்காதீங்க. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது’ என எடப்பாடி பழனிசாமியும் கூறி வருகிறார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் திரை மறைவு பேச்சுவார்த்தைகள் தான் இந்த கருத்துக்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share