“ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம்” பரந்தூரில் விஜய் பேச்சு!

Published On:

| By Kavi

நான் ஓட்டு அரசியலுக்காக பரந்தூர் வரவில்லை என்று தவெக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 20) கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் 2ஆவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார பகுதி மக்கள் இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று (ஜனவரி 20) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பரந்தூர் மக்களைச் சந்திப்பதற்காக பிரச்சார கேரவன் வேனில் சென்ற விஜய் அதில் நின்றவாறு போராட்டக்காரர்களிடம் பேசினார்.

“910 நாட்களுக்கு மேலாக உங்கள் மண்ணுக்காக போராடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசியதை கேட்டேன். அந்த சின்ன குழந்தை பேசியது எனது மனதை எதோ செய்துவிட்டது.

உங்கள் எல்லோரையும் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது. உங்கள் எல்லோருடனும் நான் உறுதியாக நிற்பேன். தொடர்ந்து நிற்பேன் என்று சொல்ல வேண்டும் என தோன்றியது. அதனால் தான் வந்தேன்.

நமது நாட்டுக்கு உங்கள் மாதிரியான விவசாயிகள் மிகவும் முக்கியம். அதனால் உங்கள் மாதிரி விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுதான் என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவில் இருந்தேன்.

அதற்கு சரியான இடம் இதுதான். உங்கள் மகனாக எனது கள அரசியல் பயணம் இந்த மக்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தொடங்குகிறது.

நம்முடைய கட்சி மாநாட்டில் கொள்கைகளை எடுத்துச் சொன்னேன். அதில் ஒன்று, இயற்கை வள பாதுகாப்பு. சூழலியல் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள கூடிய இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம். இதுதான் அந்த கொள்கை.

இதை நான் ஓட்டு அரசியலுக்காக சொல்லவில்லை. இன்னொரு தீர்மானம் என்னவென்றால், விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கையாகும்.

13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் திட்டத்தை ஒன்றிய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதுமட்டுமில்லாமல், இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று சொல்லியிருந்தோம். அதை இங்கு உங்கள் முன் உறுதியாக சொல்கிறேன் உங்களுடன் நான் நிற்பேன்.

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் அமைக்கக்கூடாது என்றுதான் நான் வலியுறுத்துகிறேன்.
இதை நான் சொல்லவில்லை எனில், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.

இன்றைக்கு இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் இருப்பையும் புவி வெப்பமயமாதல் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதனுடைய விளைவுதான் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் வெள்ளத்தில் சென்னை சிட்டி எப்படி தத்தளிக்கிறது என்பதை பார்க்கிறோம்.

சமீபத்தில் எடுத்த ஆய்வு ஒன்று, சதுப்பு நிலங்களை, நீர் நிலைகளை அழித்ததுதான் காரணம் என்று கூறுகிறது. இப்படி ஒரு சூழல் இருக்கும் போது 90 சதவிகித விவசாய நிலங்கள், நீர் நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கிற எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும்.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதை நான் வரவேற்கிறேன். அதைத்தானே பரந்தூர் பிரச்சினையிலும் செய்திருக்க வேண்டும்.

அரிட்டாப்பட்டி மக்கள் எப்படி நமது மக்களோ… பரந்தூர் மக்களும் நமது மக்கள்தான் என்று அரசு நினைக்க வேண்டும். இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டுவழிச் சாலையை எதிர்த்தீர்கள்… காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள்… அந்த நிலைப்பாட்டைதானே இங்கும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பா… எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். உங்கள் வசதிக்காக மக்களுடன் நிற்பது, நிற்காமல் இருப்பது, நாடகம் ஆடுவது, நாடகம் ஆடாமல் இருப்பது … அது சரி நம்புகிற வகையில் நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடியாச்சே. உங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடினால் பிரச்சினைதான்.

இந்த விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்த நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்பு குறைவான இடத்தில் இந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும்.

வளர்ச்சி முக்கியம்தான், அதுதான் மக்களை முன்னேற்றும் . ஆனால் வளர்ச்சி என்கிற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நீங்கள் எல்லோரும் உங்களுடைய ஊர் தேவதைகளான கொல்லமேட்டா அம்மன், எல்லை அம்மன் மேல் ரொம்பவே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.

உங்கள் வீட்டு பிள்ளையான நானும் தவெக தோழர்களும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்போம். ஏகனாபுரம் ஊருக்குள் வந்து அந்த திடலில் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏன் எனக்கு தடை விதித்தார்கள் என்று தெரியவில்லை.

இப்படிதான் சமீபத்தில் நமது கட்சியினர் நோட்டீஸ் கொடுத்தார்கள். அவர்களை கைது செய்தனர். அதுவும் ஏன் என்று எனக்கு புரியவில்லை. நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்று கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

தொடர்ந்து, ”இன்னும் கொஞ்ச நேரம் உங்களுடன் நேரம் செலவழிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் முடியாது போல. மீண்டும் ஏகனாபுரம் ஊருக்குள்ளேயே உங்களை வந்து சந்திக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

பிரியா

டெல்டா விவசாயிகளுக்காக பெ.சண்முகம் முக்கிய கோரிக்கை!

கதிர் ஆனந்தின் அடுத்த திட்டம்!  துரைமுருகன் கூப்பிட்டும் வராத நந்தகுமார் – பிறந்தநாள் பாலிடிக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel