நடிகர் விஜய் உட்பட புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வந்த விஜய்யின் லியோ வசூல் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து லியோ படத்தின் வெற்றி விழா நேற்று (நவம்பர் 1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற அனைவரும் விஜய்யின் குட்டி ஸ்டோரிக்காக காத்திருந்த நிலையில் விஜய் ‘நா ரெடி தான் வரவா’ என்ற பாடல் வரிகளுடன் தனது பேச்சை தொடங்கினார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய்யிடம் “2026” என்று கேட்டவுடன் ரசிகர்களின் ஆராவாரத்திற்கு மத்தியில் விஜய் “கப்பு முக்கியம் பிகிலு…” என்று கூறினார். இதன்மூலம் விஜய் தனது அரசியல் வருகையை சூசகமாக தெரிவித்திருப்பதாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “யார் அரசியலுக்கு வந்தாலும் நான் வரவேற்பேன். காரணம் மக்களை மேம்படுத்துவதற்காக யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.
அதனால் ஒருவர் அரசியலுக்கு வருவதற்கு யாருமே தடையாக இருக்கக் கூடாது. மக்களுக்கு சாய்ஸ் இருக்கணும். ஜனநாயகம் என்பது சாய்ஸ் தான். 3 கட்சிகள் இருக்கின்ற இடத்தில் 6 கட்சிகள் இருந்தால் நல்லது தானே. அதில் தங்களுக்கு பிடித்தவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
அதுவும் புதியவர்கள் அரசியலுக்கு வரும் போது சிஸ்டம் மாறும். 30 வருடங்கள், 40 வருடங்கள் பழையவர்களே வந்து கொண்டிருந்தால் அது தேங்கிய நிலையாகிவிடும். அதனால் தான் சொல்வார்கள் நீரோடை மாதிரி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று.
நடிகர் விஜய் உட்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். இறுதியாக தமிழக மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை ஏற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சென்னையில் வீடு கட்டுவதற்கு அனுமதி கட்டணம் உயர்வு!
பெரம்பலூரில் எடப்பாடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!