அதிகமான சொத்துகள் கண்டுபிடிப்பு: கே.பி.அன்பழகன் , சி.விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி!

Published On:

| By christopher

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் மற்றும் சி. விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (மே 22) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வென்று தற்போதுவரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இவர் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த 2016- 2021 காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கே.பி அன்பழகன் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

மேலும் தேர்தலின்போது வேட்பு மனுவில் கூறப்பட்டிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டில் 58 இடங்களில் நடைபெற்ற சோதனையில் அன்பழகன் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரிய வந்தது.

இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரைக்கும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அதனால் உடனே அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பழகன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டு 10 மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 10 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தருமபுரி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்தனர்.

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் மீதும் புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்தனர்.

அதில் இருவரின் மீதான சொத்துமதிப்பும் வழக்குகளில் பதியப்பட்டு இருந்ததை விட அதிகமாக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

கே.பி.அன்பழகன் மீது 11.32 கோடி சொத்து குவித்ததாக வழக்கு பதிவான நிலையில், அதைவிட ரூ.33 கோடி ரூபாய் அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே போல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ. 27.22 கோடி சொத்து குவித்ததாக வழக்கு பதிவான நிலையில், தற்போது 8 கோடி ரூபாய் அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரின் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணையும் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

விழுப்புரத்தில்‌ டாஸ்மாக்‌ விற்பனை அதிகரிப்பு!

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel