அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வைஃபை ஆட்டோமேட்டிக்காக கனெக்ட் ஆனது. செப்டம்பர் 15 ஆம் தேதி திமுக முப்பெரும் விழாவைக் கொண்டாடும் முன்பே, திமுக அரசின் விஜிலென்ஸ் துறை செப்டம்பர் 13 ஆம் தேதியான இன்று வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகிய இருபெரும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியது.
இந்த ரெய்டுக்குப் பின் மாலையில் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், “அடுத்து எப்பப்பா ரெய்டுக்கு வருவாங்கனு என் மகள் என்னிடம் கேட்டார்” என்று ரொம்ப ரிலாக்ஸாக கேஷுவலாக புன்னகை மாறாமல் பேசினார். இந்த வீடியோ க்ளிப்பைப் பார்த்துவிட்டு ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டசில் தகவலை பதிவு செய்யத் தொடங்கியது.
“விஜயபாஸ்கர் மீது இந்த திமுக ஆட்சியில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற ரெய்டுக்குக் காரணம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வேல்ஸ் குழுமத்துக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் முறைகேடு என்று விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குதான். விஜயபாஸ்கர், வேல்ஸ் குழும உரிமையாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடந்துள்ளது.
ரெய்டுக்குப் பின் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் ரிலாக்சாக சிரித்தபடி பேசியிருக்கிறார். அந்த செய்தி மின்னம்பலத்தில் தனியாக வெளியாகியிருக்கிறது. ரெய்டு என்றால் வழக்கமாகவே முன்னாள் ஆளுங்கட்சியினருக்கு வரவேண்டிய குறைந்த பட்ச பதற்றம் கூட இந்த ரெய்டின் போது விஜயபாஸ்கரிடம் இல்லை. இதுபற்றி விசாரித்தபோது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.
கடந்த 2021 இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கைக்கு சுமார் ஒரு மாத காலம் இடைவெளி இருந்தது. அப்போதே அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது அப்போதைய அதிமுக அமைச்சர்களிடம் பேச்சாக இருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டாலினால் கடுமையாக விமர்சிக்கப் பட்டவர் விஜயபாஸ்கர். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்குமான இடைவெளியில் தனக்கு நெருக்கமான சிலர் மூலம் திமுக முக்கியஸ்தர்களிடம் விஜயபாஸ்கர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ’உங்க தலைவர் என் மேல ரொம்ப கோபமாக இருக்காரு. ஆட்சி மாறினாலும் அந்த கோபம் தொடராம கொஞ்சம் பாத்துக்கங்க’ என்று அப்போதே விஜயபாஸ்கர் அவர்களிடம் பேசி வைத்தார். திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வித்தைகளை அவர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பில் இருந்தே ஆரம்பித்துவிட்டார்.

விஜயபாஸ்கர் எதிர்பார்த்தது போலவே திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனாலும் திமுக தொண்டர்கள் எதிர்பார்த்தபடி ஸ்டாலின் அன்று கடுமையாக குற்றம் சாட்டிய விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை இல்லை. அதுமட்டுமல்ல… விஜயபாஸ்கர் வகித்த சுகாதாரத்துறையில் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் தான் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார். விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரும் சுகாதாரத்துறையில் இருந்தவருமான உமாநாத் தான் இப்போதைய திமுக ஆட்சியில் முதல்வரின் செயலாளர்களில் ஒருவராகவே இருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல, அதிமுக ஆட்சி காலத்தில் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் அதே முக்கியமான இடங்களில் தொடர்கிறார்கள். இந்த அளவுக்கு விஜயபாஸ்கர் இன்னமும் திமுக ஆட்சிக் காலத்திலும் தாக்கம் செலுத்தும் ஆளுமையாகவே தொடர்கிறார்.
இந்த பின்னணியில்தான், இந்த ரெய்டு தன்னை நோக்கி நடத்தப்பட்டதல்ல, வேல்ஸ் குழுமத்தின் அதிபரான ஐசரி கணேஷை குறிவைத்து நடத்தப்பட்டது என்று விஜயபாஸ்கரே தனக்கு நெருக்கமானவர்களிடம் ரிலாக்ஸாக சொல்லியிருக்கிறார்.

2010 ஆண்டு திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து சேர்ந்தார் சேகர்பாபு. 2011 ஆம் ஆண்டு தேர்தலில் மின்வெட்டு பிரச்சினை போன்றவை காரணமாக திமுக தோல்வி அடைவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று அப்போதே பேசப்பட்டது. அந்த சூழ்நிலையிலும் சேகர்பாபுவை அதிமுகவில் இருந்து திமுகவுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர் ஐசரி கணேஷ். அவரும் அக்னி ஜெபி என்பவரும்தான் ஸ்டாலினிடம் பேசி சேகர்பாபுவை திமுகவில் சேர்த்தனர்.
அப்போதில் இருந்தே ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் ஐசரி கணேஷ். தற்போது சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தைத் தயாரித்திருப்பவர் ஐசரி கணேஷ். அந்த படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். இவ்வாறு தொழில் ரீதியாக உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கும் ஐசரி கணேஷ் மீதுதான் இப்போது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

உட்கட்சித் தேர்தலில் கடந்த பத்து வருடங்களாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது செலவு செய்த நிர்வாகிகளை அப்படியே இப்போதும் தொடர முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.ஆனபோதும் சேகர்பாபு கேட்டுக் கொண்டார் என்பதற்காக பத்து வருடம் எதிர்க்கட்சியாக பணியாற்றிய சில பகுதிச் செயலாளர்களை கூட மாற்ற ஒப்புதல் அளித்துள்ளார். அந்த அளவுக்கு சேகர்பாபுவின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பவர் ஸ்டாலின். இந்த நிலையில் சேகர்பாபுவுக்கு மிகவும் நெருக்கமானவரும் தனது குடும்பத்துக்கு நெருக்கமானவருமான ஐசரி கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க எப்படி சம்மதித்தார் என்பதுதான் திமுகவின் சீனியர்கள் மத்தியிலேயே விவாதமாக உள்ளது.
ஐசரி கணேஷுடன் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் தெரிகிறது என்கிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள். ஆக இந்த ரெய்டு விஜயபாஸ்கரை குறிவைத்து நடத்தப்பட்டதல்ல, ஐசரி கணேஷை குறிவைத்து நடத்தப்பட்டதுதான். ஆனால் அதற்கான காரணம்தான் புரியாத புதிராக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். இதெல்லாம் தெரிந்துதான் விஜயபாஸ்கர் ரிலாக்ஸாக இருக்கிறார்” என்ற மெசேஜை ஸ்டேட்டஸ் போட்டு அதை பப்ளிஷ் செய்தது ஃபேஸ்புக்.
ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் இல்லை: விஜயபாஸ்கர் மீதான வழக்கு விவரம்!