கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.பிரபு வீட்டில் இன்று (மார்ச் 1) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தொடர்புடைய 9 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபு , அவரது அப்பா ஐயப்பா, விழுப்புரத்தில் உள்ள அவரது சகோதரி வசந்தி ஆகியோரது இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.வாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்கட்சியினரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவது அதிமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் எம்எல்ஏ பிரபு அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து , மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஸ்டாலினுக்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்த பாஜக
ஓ.பி.எஸ் சொத்துக்குவிப்பு வழக்கு..அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!