”ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை என்றும் விசிக கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது” எனவும் அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் நற்சோனை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முன்னிலையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுக பேச்சாளர் சைதை சாதிக், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளான குஷ்பு, நமீதா, கெளதமி ஆகியோரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு தமிழக பாஜகவில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த விவகாரம் ஓய்ந்து அடங்குவதற்குள் தமிழக பாஜகவிலேயே அதுபோல் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. அக்கட்சியில் ஓபிசி அணி பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா அக்கட்சியின் பெண் நிர்வாகியை செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசியது பாஜகவில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.
”திருச்சி சூர்யாவின் இந்த ஆபாச பேச்சு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அவரை கைது செய்ய வேண்டும்” என பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் குரல் கொடுத்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி சூர்யா நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்து விசாரணை கமிஷன் அமைத்தார். அத்துடன் காயத்ரி ரகுராமை 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கி வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 23 ) விசிக மகளிர் அணி சார்பில் சென்னை தியாகராயர் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திருமாவளவனும் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விசிக மகளிர் அணிச் செயலாளர் நற்சோனை, கட்சியின் ஆண் நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், நற்சோனை பேசிக் கொண்டிருந்த மைக்கை ஆப் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து விசிக நிர்வாகி ஒருவர் மைக்கை ஆப் செய்ய சென்றார்.
அப்போது நற்சோனை, ”விசிக ஆண் நிர்வாகிகள் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டமுடியுமோ, அவ்வளவு கேவலமாக திட்டி இருக்கானுக.. நான் டேப் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். அதை எல்லாம் நான் காட்டுகிறேன். ஆண் சமூகம் இன்னமும் திருந்தவில்லை.
ஆண் சமூகம் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம். இந்த கட்சிக்குள் (விசிகவுக்குள்) சனாதனம் இருக்கிறது. டாப் டூ பாட்டம் வரை கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது” என அவர் பேசிக் கொண்டிருந்த போதே, மைக் ஆப் செய்யப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மைக்காலமாக அரசியல் கட்சியினர் தங்கள் சொந்த கட்சியை சேர்ந்த பெண்களிடமே அநாகரிகமாகவும், ஆணாதிக்க தன்மையுடனும், ஆபாசமாக பேசும் வக்கிரபுத்தியுடனும் செயல்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா : கீரை சாதம்
காதலியை மணக்கிறார் கவுதம் கார்த்திக்