அன்று ஆடியோ, இன்று வீடியோ: திமுக உட்கட்சித் தேர்தலில் திருப்பங்கள்!

அரசியல்

செப்டம்பர் 25  ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன் காலை 11.30 மணியளவில் அறிவாலயத்தில் தனது காரில் நுழைந்தார். அவர் உள்ளே நுழையும்போதே ஆர்ப்பாட்ட கோஷங்களும் போராட்ட முழக்கங்களும் கேட்டன.

என்னய்யா இது அறிவாலயத்துக்குள்ளயேவா? என்று டிரைவரிடம் ஆச்சரியப்பட்டவர்,  அறிவாலய  விஐபி என்ட்ரன்ஸுக்குத் திரும்புகையில் கண்ணாடிக் கதவுகளை இறக்கிவிட்டு, ‘’என்னய்யா..;. என்ன சத்தம்?’ என்று கேட்டிருக்கிறார்.

‘ஐயா… நாங்க தென்காசி வடக்கு மாவட்ட திமுக. எங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை மனு போட்டிருக்காரு. ஆனா இப்ப அவருக்கு இல்லைனு சொல்றாங்கய்யா…’ என்று அவர்கள் சொல்லி முடிக்கு முன்பே, ‘சும்மா இருங்கய்யா… இன்னிக்குதானே மனு தாக்கலே முடியப் போகுது.

இனிமே  பரிசீலனையெல்லாம் இருக்கு. இங்கல்லாம் இப்படி பண்ணாதீங்க போங்க போங்க’ என்று சொல்லிக் கொண்டே கோபத்தோடு இறங்கி அறிவாலயத்துக்குள் சென்றார்.

தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் பேசி அனைவரையும் கலைந்துபோகச் செய்தனர். அதற்குள் அறிவாலயத்தில் திமுகவினர் தர்ணா என்ற செய்தி வீடியோவாக பரவியது.

இதற்குப் பின்னர்தான் திமுக தலைவர் ஸ்டாலினைத் தொடர்புகொண்ட துரைமுருகன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.  “திமுக 15 ஆவது பொதுத் தேர்தலில்  மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 25 வரை  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு,

நடைபெற்று வரும் நிலையில் …செப்டம்பர் 25 அன்று அனைத்து மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுற்ற பின்னர் செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று  தகுதியுள்ள வேட்பாளர்கள் பெயர்கள் அறிவித்து அதன் பின்னர் போட்டியுள்ள மாவட்டங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு  மாவட்டக் கழகத் தேர்தல் நடைபெறும்” என்று அறிவித்தார் திமுக பொதுச் செயலாளர்.

வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கான அதாவது  மதுரை, விருதுநகர், தென்காசி,  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

அந்த வகையில் அன்றே தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு தற்போதைய  மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதனும்,  தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு அதன் தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரையும் மனு தாக்கல் செய்தனர்.

தென்காசி தெற்கு மாவட்டத்தில் தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் சிவ பத்மநாபன் சுமார் 500 நிர்வாகிகளுடன் வந்து மாஸ் காட்டினார். மாவட்டச் செயலாளர் தேர்தலில் மொத்த ஓட்டுகள் 76 என இருக்கும் நிலையில் 68 வாக்காளர்களை அதாவது 68  நிர்வாகிகளோடு வந்து ஏகமனதாக வேட்பு மனு தாக்கல் செய்தார் சிவபத்மநாதன்.

அவருக்கு போட்டியாக சுரண்டை நகர செயலாளர் ஜெயபால், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரைராஜ், மாநில தீர்மான குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் சிவபத்மநாதன் பெருவாரியாக நிர்வாகிகளின் ஆதரவை பெற்றிருப்பதை அறிந்த முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அங்கேயே சிவபத்மநாதனின் வெற்றியை உறுதி செய்துவிட்டார்.

அதையடுத்து ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி என பல இடங்களில் சிவ பத்மநாதனின் ஆதரவாளர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து,பட்டாசு கொளுத்தி, லட்டுகளை வழங்கி கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்

அமைதியாக தெற்கு… ஆர்பாட்டமான வடக்கு

தென்காசி தெற்கு மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் இதேநேரம் தென் காசி வடக்கு மாவட்டத்தில் ஒரு குழப்பம் தொற்றிக் கொண்டது.  தற்போதைய மாவட்டப் பொறுப்பாளரான செல்லதுரையோடு செங்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் உள்ளிட்ட வேறு சிலரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மனு தாக்கல் நாளான 22 ஆம் தேதியே தென்காசி எம்பியும் விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான தனுஷ்குமாரிடம் இருந்து மாசெ பதவிக்கான விருப்ப மனுவை கேட்டுப் பெற்றிருக்கிறது தலைமை என்ற தகவல்  செல்லதுரைக்குக்  கிடைத்தது.

இதையடுத்து சென்னையிலேயே தங்கிய தென்காசி தெற்கு மாவட்டப்  பொறுப்பாளரான செல்லதுரை மறுநாள் 23 ஆம் தேதி அறிவாலயம் சென்று முதன்மைச் செயலாளர் நேருவை சந்திக்க முயற்சி செய்தார். சில மணி நேரங்களில் நேருவை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நேத்துவரை நீதாம்ப்பா மாசெ- செல்லதுரையிடம் நேரு
அப்போது செல்லதுரையிடம் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ‘நேத்து வரைக்கும் நீதாம்ப்பா மாவட்டச் செயலாளர். ஆனால் இன்னிக்கு நிலைமை மாறிடிச்சு. உன்னைப் பத்தி தலைவருக்கு சில தகவல்கள் போயிருக்கு, போட்டோவும் வீடியோவும் அனுப்பி வச்சிருக்காங்க. அதைப் பாத்துட்டு தலைவரே ஷாக் ஆயிட்டாரு” என்று சொன்னதும் நேருவின் கால்களில் விழுந்தார் செல்லதுரை.

அவரை எழுப்பிய நேரு, ‘இருப்பா… என்னால ஒண்ணும் பண்ண முடியாதுப்பா… உன்னோட கொடிக் கம்பம் சாஞ்சிடுச்சுப்பா. அவ்வளதான் என்னால சொல்ல முடியும்’ என்று சொல்லி செல்லதுரையை அனுப்பிவிட்டார்.

இதற்குப் பிறகுதான் வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான  செப்டம்பர் 25 ஆம் தேதி திடீரென செல்லதுரையின் ஆதரவாளர்கள் அறிவாலயத்தில் குவிந்து, ‘வெளிப்படையாக தேர்தல் நடத்தி மாசெ வை அறிவிக்க வேண்டும்’ என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.  இதுபற்றி தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினரிடத்தில் பேசினோம்.

’தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக செல்லதுரை மீது  தலைமைக்கு பல்வேறு புகார்கள் பறந்தன. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான செல்லதுரை கடந்த உள்ளாட்சித் தேர்தலில்  தனது மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு  உள்ளாட்சிப் பதவிகளில் தனது உறவினர்கள், தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுத்தார்.

பொது இடங்களில் கூடதனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே தலைவராகக் கொண்டுவந்தார். 

தென்காசி வடக்கு மாவட்டத்தில் 6 ஒன்றியங்கள் உள்ளன. இதில் நான்கு ஒன்றியச் செயலாளர்கள் செல்லதுரையின் சமுதாயத்தவர். கடையநல்லூர் ஒன்றிய சேர்மன் என்பது பொதுப் பிரிவில் உள்ளது. ஆனால் அதில் தனது அக்காவை தலைவராக்கினார்.

செங்கோட்டை நகராட்சி, புதூர் பேரூராட்சி, தென்காசி ஒன்றியம், ஆயக்குடி, சாம்பவர் வடகரை ஒன்றியங்கள், வாசுதேவநல்லூர், புளியங்குடி,  மாவட்ட ஊராட்சித் தலைவர்  என அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட பல  பொதுப் பிரிவுகளில்  மற்ற சமுதாயத்தினருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என செல்லதுரை மீது தலைமைக்கு புகார்கள் பறந்தன.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, தானே   மீண்டும் மாவட்டச் செயலாளர் என்பதற்காக தனது ஆதரவு நிர்வாகிகளை கோவா, என்று வெளியூர்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று குளிப்பாட்டினார். இந்த நிலையில்தான் செல்லதுரையை பற்றிய ஓர் வீடியோ நேரடியாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் கவனத்துக்குக்  கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து அதிர்ந்து போன ஸ்டாலின் முதன்மைச் செயலாளர் நேருவைக் கூப்பிட்டு, ‘ஐயோ செல்லதுரைக்கு கொடுக்க வேணாம். இந்த வீடியோ வெளிய வந்துச்சுன்னா கட்சியோட பேரு அவ்வளவுதான்’ என்று சொல்லியிருக்கிறார். நேருவும் அந்த வீடியோவை பார்த்து தலையிலடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்குப் பிறகுதான்  செல்லதுரை மறுநாள் 23 ஆம் தேதி நேருவால் அழைக்கப்பட்டு,  ‘நேத்து வரை நீதாம்ப்பா மாவட்டச் செயலாளர். ஆனால் இனிமே தலைவர் வேண்டாம்னு சொல்லிட்டாரு’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

செல்லதுரை சம்பந்தமான  அந்த வீடியோ அவர் ஒன்றிய செயலாளராக இருந்தபோது எடுக்கப்பட்டதாம். சரியாக சமயம் பார்த்து அந்த வீடியோவை  இப்போது மாசெ தேர்தலின்போது தலைவரின் கண்ணுக்கு போகும்படி கச்சிதமாக சிலர் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அத்தோடு செல்லதுரையின்  மாசெ கனவைத் தகர்த்துவிட்டார்கள். அந்த காரணத்துக்காக செல்லதுரையின் மாசெ பதவி பறிபோனதாக இருக்கக் கூடாது என்பதால்தான் அறிவாலயத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்” என்று முடித்தனர்.

எம்பி தனுஷ்குமார் விருதுநகரைச் சேர்ந்தவர் என்றும் தென்காசி எம்பியாக இருக்கும் அவர், அதையே தகுதியாக வைத்து தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மாசெ ஆக கூடாது என்றும் செல்லதுரை விடாப் பிடியாக போராடி வருகிறார். மாசெக்கள் பட்டியலில் இதற்கான விடை கிடைக்கும்!

ஏற்கனவே தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த துரை திமுக தலைவரின் குடும்பத்தைப் பற்றி தரக் குறைவாக விமர்சித்ததாக ஓர் ஆடியோ வெளிவந்து அவரது பதவி பறிபோனது. அவருக்குப் பிறகு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக வந்த செல்லதுரையை குறிவைத்து மாவட்டச் செயலாளர் தேர்தல் நேரத்தில் வீடியோ அஸ்திரம் ஏவப்பட்டிருக்கிறது. திமுக உட்கட்சித் தேர்தலில் ஆடியோவும் வீடியோவும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.

வேந்தன்

விடுதலை கோரி நளினி மனு: மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!

இயக்குநர்கள் மீது ஷான் ரோல்டன் ஆதங்கம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *