அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் கொடுத்த முன்னாள் ஒன்றிய செயலாளர் சத்துணவு வேலைக்காக பணம் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அதிமுக முன்னாள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த 15.11.2021-ம்தேதியன்று கே..ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் தலைமறைவானார்.
பின்னர் கடந்த ஜனவரி 5 ம்தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் உச்சநீதிமன்ற ஜாமீனில் இருக்கிறார். இந்நிலையில், கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் கொடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பணம் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில், விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் விஜய நல்லதம்பி.
சிவகாசி அருகே தாயில்பட்டி கோட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 ½லட்சம் வாங்கி உள்ளார்.
கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரையும், கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷும், ராமத்தேவன்பட்டியிலுள்ள விஜய நல்லதம்பியின் வீட்டில் வைத்து அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
விஜய நல்லதம்பியிடம் கடந்த 1-11-2020 அன்று பணத்தை கொடுத்தபோது, உடன் சென்ற கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், யாருக்கும் தெரியாமல் தன்னுடைய செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் விஜய நல்லதம்பி, “14-ஆம் தேதி இன்டர்வியூ. 15-ஆம் தேதி ஆர்டர் காபி வந்திரும். அமைச்சருக்கு கொடுக்கணும். விருதுநகர் கலெக்டரே வாங்குறாரு. மூன்றரை லட்சத்தை கம்பல்சரியா கொடுத்தாகணும்.” என்கிற ரீதியில் பேசுகிறார்.
அப்போது பணம் கொண்டு வந்தவர்கள், “எந்த திசையைப் பார்த்து பணம் கொடுக்கணும்? என்று கேட்கிறார்கள். அதற்கு விஜய நல்லதம்பி, “மனசு நல்ல மனசா இருந்தா போதும்” என்று சொல்கிறார்.
நெடுநாட்களாகியும் சத்துணவு அமைப்பாளர் வேலையும் வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணவேணி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் விஜயநல்லதம்பி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜய நல்லதம்பியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
கலை.ரா
திமுகவுக்கு ஒரு நியாயம் அதிமுகவுக்கு ஒரு நியாயமா?– தங்கமணி கேள்வி!
ஸ்டாலினுக்கு அசோக் வரதன் ஷெட்டி- உதயநிதிக்கு ககன் தீப் சிங் பேடி: ஆயத்தமாகும் அமைச்சகப் பணிகள்!