பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் வெடித்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் 3 வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவு!
இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு இன்று (ஜனவரி 8) தீர்ப்பளித்தது.
அதில், “குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்க குஜராத் அரசுக்கு தகுதி இல்லை. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது ரத்து செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதியைக் கொல்லும் போக்கு ஆபத்தானது!
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை பலரும் வரவேற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொல்லும் போக்கு ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்தானது.
இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘குற்றவாளிகளின் பாதுகாவலர்’ யார் என்பதை நாட்டுக்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது.
பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றியின் சின்னம்” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? – பாலச்சந்திரன் அறிவிப்பு!