இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று ( ஜூலை 18 ) நடைபெற்றது.
தற்போது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு உள்ளார். அவருடைய பதவிக்காலம் ( ஆகஸ்ட் 10 ) ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ( ஆகஸ்ட் 6 ) ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்காள மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ( ஜூலை 5 ) ஆம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ( ஜூலை 20 ) ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற ( ஜூலை 22 ) ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களவை உறுப்பினராகவும் , முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டு துறை கேபினட் அமைச்சராகவும், உத்தரகாண்ட் , ராஜஸ்தான் , குஜராத் மற்றும் கோவா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ( ஜூலை 19 ) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரக அறிவிக்கப்பட்ட மார்கரெட் ஆல்வா இன்று (ஜூலை 19) தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மல்லிகார்ஜூன கார்கே, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் உடனிருந்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்