வெற்றிமாறன் பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும்!

அரசியல்

ராஜராஜ சோழனின் சமயம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசிய கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி கடந்த அக்டோபர் 2ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவை அரசியல் மையப்படுத்த வேண்டியது முக்கியம்.

சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானதுதான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பதுதான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும், இப்படி தொடர்ந்து நடக்கிறது.

சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம்தான் என நினைக்கிறேன்” எனப் பேசி இருந்தார்.

இவருடைய கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக நடிகரும், சமக தலைவருமான சரத்குமார், “வெற்றிமாறன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது சுதந்திர நாடு. யார் என்ன கருத்து சொல்ல விரும்புகிறார்களோ, அதைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இது ஜனநாயக நாடு” எனத் தெரிவித்தார்.

பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்த மண்ணின் மதமான இந்து மத கலாசாரத்தை, அடையாளங்களை அழிக்க, இங்கு பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சிதான் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு” என அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான நடிகர் கருணாஸ், ”வெற்றிமாறன் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது.

இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம். இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள்.. இராசராசன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு! ஆனால் இராசராசசோழனை, இராஜேந்திரசோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்லுவது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது.

காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் தமது தெய்வக்குரல் நூலில்.. ’நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம்’ என்றார். அந்தப் ’பிழைத்துக் கொண்டோம்’ என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அவரை அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.

ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது” என அதில் தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தமிழக அரசு- அமலாக்கத்துறை ஹேப்பி! 

நான் நித்யானந்தாவா? இடிக்கப்பட்ட ஆசிரமம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *