இதில் குஜராத் மாடலை தமிழ்நாடு பின்பற்றலாம்: வேல்முருகன் கோரிக்கை!

அரசியல்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்”

என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை, மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்திருந்தது.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டைப்போன்று இந்தாண்டும், நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

குறிப்பாக, ராஜீவ் கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தால், தற்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் தொடுத்த இவ்வழக்கில், தமிழ்நாட்டு அமைச்சரவைத் தீர்மானமே இறுதியானது.

தமிழ்நாடு அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர், விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருந்தது.

இத்தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, எஞ்சிய நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 தமிழர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதனை தள்ளிப்போட வேண்டிய அவசியம் இல்லை.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், வகுப்புவாத மற்றும் மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் இசுலாமிய சகோதரர்களுக்கு முன் விடுதலை மறுக்கப்பட்டது.

ஆனால் கருணை என்று வரும்போது, மதம் என்ற பாரபட்சம் பார்க்கக்கூடாது என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்து” என்று குறிப்பிட்டிருக்கும் வேல்முருகன்,

“சமீபத்தில், குஜராத்தில் ஆளும் பாஜக அரசு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்ட பில்கீஸ் பானு வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் 14 ஆண்டுகளில் விடுதலை செய்துள்ளது.

ஆனால், இன்றுவரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவது ஏன்? சாதி, மத வேறுபாடின்றி நன்னடத்தை விதிகளின்கீழ் முன் விடுதலை பெறும் உரிமை இசுலாமியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?.

எனவே, திமுக ஆட்சிக்கு வந்தால், நீண்டகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களை விடுதலை செய்வோம் என்ற தேர்தல் பரப்புரை செய்த முதலமைச்சர்,

செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையொட்டி நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 6 தமிழர்களையும்,

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

5 ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஜெயில்: சுடச்சுட பூரி,அல்வா ! எங்கே தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *