“உங்கள் கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றத்திலேயே நடந்து கொண்டிருந்தால் கட்சியை எப்படி கவனிப்பீர்கள்?” என்று உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை பார்த்து காட்டமாக கேட்டிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்ற நிலையில்..
நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தனது இறுதி கட்ட வாதத்தை முன் வைத்தது.
அதிமுக தலைமை கழகம் சார்பிலும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களே. பன்னீர்செல்வம் தரப்பும் தங்களது வாதத்தை முன் வைத்தது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கு குறித்து எழுப்பி இருக்கும் கேள்விகளை உற்று நோக்கும்போது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இறுதியான முடிவெடுக்க முடியுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களிலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இதற்குக் காரணம் பன்னீர், எடப்பாடி தரப்பிடம் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்தான்.
“அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான சந்தேகங்களுக்கு கட்சியின் சட்ட விதிகளில் தெளிவான புரிதல் இல்லை. இரட்டைத் தலைமை இணைந்து செயல்படுவதில் சிக்கல்கள் இருந்தால் கட்சியை எப்படி நடத்துவீர்கள்?,
இரு பதவிகளில் இருப்பவர்களில் ஒருவருக்கு அதில் தொடர விருப்பம் இல்லையென்றால், அல்லது அந்த ஒருவர் மட்டும் பதவி விலகினால் அல்லது ஒருவருக்கு தகுதி இல்லையென்றால் அதன் பின் தலைமையின் நிலை என்ன?,
கட்சி விதிகளிலேயே தெளிவான புரிதல் இல்லை. இப்படி நீதிமன்றங்களிலேயே வழக்கு நடத்திக் கொண்டிருந்தால் கட்சியை, கட்சிப் பணிகளை எப்படி கவனிப்பீர்கள்?”,
என்று இரு தரப்பினருக்கும் கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள் அதிமுகவின் அவைத் தலைவர் என்றால் யார், அவருக்கு என்ன அதிகாரம் என கட்சியின் சட்ட விதிகள் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றுக் கொண்டார்கள்.
திங்கள் கிழமைக்குள் இவ்வழக்கின் அனைத்து தரப்பினரும் இறுதி கட்ட எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
மேலும், ”இன்று நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தால், இருவரில் ஒருவருக்கு கட்சியை கொடுக்கும் அளவுக்கு தெளிவான தீர்ப்பு வராது என்றே தெரிகிறது,
அரசியல் ரீதியாக தீர்வு காணச் சொல்லும் வாய்ப்புகள் இருக்கலாம்” என்கிறார்கள் இவ்வழக்கை கவனிக்கும் அதிமுக பிரமுகர்களே.
–வேந்தன்
ஈரோடு கிழக்கு தொகுதி: சட்டப்பேரவை செயலகம் முக்கிய அறிவிப்பு!
“இல்லாத பதவிகளை கேட்டதே ஈபிஎஸ் தான்” – ஓபிஎஸ் வாதம்!