திமுக வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வாசித்து வெளியிட்டார்.
21 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் அதில் 10 தொகுதிகள் ஏற்கனவே எம்பிகளாக இருப்பவர்களே மீண்டும் போட்டியிடுகிறார்கள். மீதி 11 தொகுதிகளில் புதிய வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் கோவை தொகுதி வேட்பாளராக முன்னாள் கோவை மேயரும், தற்போதைய திமுகவின் கோவை மாவட்ட அவைத் தலைவருமான கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதில் நேற்று (மார்ச் 19) வரை ஆலோசனை நீடித்திருக்கிறது.
மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் மார்ச் 19 ஆம் தேதி, ‘மாறும் வேட்பாளர்கள் யார் யார்? ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் கூட கோவை மக்களவைத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மருமகன் டாக்டர் கோகுல் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டு 19ஆம் தேதி இரவு வரை ஆலோசனை நீடிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தோம்.
அப்படியாக கடைசி நேர ஆலோசனையில், சிறையில் இருக்கும் முன்னாள் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியின் சிபாரிசான… கணபதி ராஜ்குமார் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
யார் இந்த ராஜ்குமார்?
கோவை மாநகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மேயர் ஆனார் அதிமுகவின் செ.ம.வேலுச்சாமி. 2014 ஆம் ஆண்டு அவர் பயணித்த கார் பல்லடம் -சூலூர் பகுதியில் ஒரு விபத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் சிக்கியவர் இறந்துவிட்டார். விபத்து ஏற்படுத்திய காரில் மேயர் செ.ம.வேலுச்சாமி இருந்ததாகவும், ஆனால் நிற்காமல் போய்விட்டதாகவும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் போனது.
ஏற்கனவே 2014 மக்களவைத் தேர்தலில் செ.ம.வேலுசாமியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான புகார்கள் ஜெயலலிதாவுக்கு சென்றிருந்தன. இந்த நிலையில் விபத்து பற்றிய தகவல் சென்றதும் உடனடி ஆக்ஷன் எடுத்தார் ஜெயலலிதா.
கோவை மாநகர கமிஷனரை மேயர் வேலுசாமியின் வீட்டுக்கு சென்று மேயரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்று வர உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல கோவை மாநகர மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் வேலுசாமியை அகற்றி, கோவை புறநகர் மாசெ ஆக இருந்த வேலுமணியிடம் கூடுதல் பொறுப்பாக மாநகர மாசெ பதவியையும் கொடுத்தார்.
அதன்பின் புதிய மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டபோது, அப்போது எஸ்.பி.வேலுமணி தனக்கு நெருக்கமானவராக இருந்த கவுன்சிலரான கணபதி ராஜ்குமாரை மேயர் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தார். 2014 முதல் 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார் கணபதி ராஜ்குமார்.
கணபதி ராஜ்குமார் மேயரானதும் தான் சொன்ன எல்லாவற்றையும் செய்வார் என்று எதிர்பார்த்தார் வேலுமணி. ஆனால் மேயர் கணபதி ராஜ்குமாரோ சில விவகாரங்களில் முரண்பட்டார். இதனால் மேயர் கணபதி ராஜ்குமாருக்கும் வேலுமணிக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. எஸ்.பி. வேலுமணி மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில்… கணபதி ராஜ்குமாரை ஓரங்கட்டத் தொடங்கினார்.
இந்த நிலையில்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுகவில் அதிருப்தியாக இருப்பவர்களை எல்லாம் ஸ்மெல் செய்து அவர்களை 2020 இல் திமுகவுக்கு அழைத்து வந்தார் செந்தில்பாலாஜி. அப்படித்தான் முன்னாள் மேயரான கணபதி ராஜ்குமாரும் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் கோவை மாநகர மாவட்ட அவைத் தலைவர் பதவியை அளித்தார் செந்தில்பாலாஜி.
தற்போது அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் செந்தில்பாலாஜி தனது சிபாரிசாக கணபதி ராஜ்குமார் பெயரையே தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
முதலில் டாக்டர் கோகுல் பெயரை பரிசீலித்த தலைமை, செந்தில்பாலாஜி பரிந்துரைத்த கணபதி ராஜ்குமார் பற்றி விசாரித்து அறிந்தது. அவருக்கு சட்ட ரீதியாக பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன்பின் அவரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
செந்தில்பாலாஜியின் சிபாரிசு கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் ஏற்கப்படவில்லை என்றாலும், கோவை தொகுதியில் சிறையில் இருந்தபடி செந்தில்பாலாஜி சொன்னவரே திமுக வேட்பாளராகியிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
Honor Band 9: கம்மி விலை, நீடித்த பேட்டரி… உண்மையிலேயே செம ஸ்மார்ட்!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்? – செல்வப்பெருந்தகை பதில்