தற்போது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் முதல்வராவார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜூலை 13ஆம் தேதி வெளியிட்டார். முன்னாள் அமைச்சரும் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணியை அதிமுக தலைமை நிலைய செயலாளராக அறிவித்தார். இந்த பதவி கொடுக்கப்பட்ட பின் சென்னையிலிருந்து நேற்று (ஜூலை 14) இரவு கோவை சென்ற எஸ்.பி.வேலுமணிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “இன்று பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் முதலமைச்சராக வருவார்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “எனக்கு ஜெயலலிதா இருக்கும் பொழுது மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக அறிவித்திருக்கிறார். அவர் அற்புதமான ஆட்சியை தந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா அறிவித்த , எதிர்பார்த்த திட்டங்கள் அத்தனையும் கொண்டு வந்தவர். நாடாளுமன்ற தேர்தலிலும் சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்” என்றார்.
அப்போது உங்களுடன் சேர்ந்து பயணித்த வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இணையத் தயாராக இருந்தால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “அது பற்றிய முடிவைப் பொதுச்செயலாளர் தான் எடுப்பார்” என்றும் குறிப்பிட்டார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்