ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை: வேல்முருகன்

அரசியல்

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 18) காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை வரவேற்றுப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “தமிழ்நாட்டில் வாழ்கின்ற 7 கோடி மக்களின் உள் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை, நாட்டிற்கு தேவையான சட்டங்களை இயற்றி தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய ஆளுநருக்கு அனுப்பும் போது, அதில் உடனடியாக கையொப்பமிட்டு, அரசு ஏனைய நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் அவர் தமிழக ஆளுநராக இருக்கிறார்.

ஆனால் அந்த ஆளுநர் தன்னுடைய கடமையை, தன்னுடைய பணியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பால் எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியை செய்ய தவறுகின்ற போது, அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்கின்ற வகையில் மறு ஆய்வு செய்வதற்காக இந்த பேரவை விதி எண் 143-ன் கீழ் கூடியிருக்கின்றது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு தந்திருக்கக்கூடிய உட்பிரிவு 200-ன் கீழ் இன்றைக்கு மீண்டும் இந்த சட்டத்தை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப இருக்கிறோம்.

அப்படி அனுப்ப இருக்கின்ற அரசின் சட்ட முன் வடிவை தமிழக முதல்வர் இந்த அவைக்கு முன்மொழிந்துள்ளார். முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக நான் வரவேற்கிறேன்.

தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழக சட்ட திருத்தம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2 சட்ட திருத்தங்கள், தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்தம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்ட திருத்தம் உள்ளிட்ட 10 மசோதாக்களையும் நாம் ஆய்விற்கு எடுத்து கொள்ளும் போது, இந்க சட்டமன்றம் ஆய்வு செய்து ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வரலாற்று குறிப்புகளில் இடம் பெற வேண்டும்.

இந்த 10 மசோதாக்களையும் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எமது கட்சியின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்த மண்ணில் வாழ்கின்ற அனைத்து மக்களின் சார்பாகவும் எனது கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகு ஆளுநர் இந்த 10 மசோதாக்களையும் அவசர அவசரமாக திருப்பி அனுப்பியுள்ளார். எந்த பல்கலைக்கழகத்திற்கு சட்டம் இயற்றினாலும் அது மக்களுக்காக இயற்றப்படும் சட்டமே தவிர, மக்களுக்கு எதிரான சட்டங்கள் அல்ல. இந்த 10 சட்ட மசோதாக்களும், கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், வேளாண்மை போன்ற பல்கலைக்கழக சட்டங்களை எந்த காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று நாடே அறியும். இந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம். அதை அங்கீகரிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. எனவே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மீண்டும் வருகிறான் ஆளவந்தான்: 1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்!

சிறப்பு சட்டமன்ற கூட்டம்: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *