தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். ஆனால், என் சட்டமன்றத் தொகுதிக்கு அமைச்சர்கள், துணை முதல்வர் ஆகியோர் ஃபெஞ்சல் புயல் சேதத்தைப் பார்வையிட வந்தபோது… ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கூட எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
மேலும், சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், தனது எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்றும் வேல்முருகன் விளக்கமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், வேல்முருகன் பேச்சு குறித்து திமுக தரப்பில் இருந்து இதுவரை யாரும் வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை.

ஆனால் வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பில் சொன்ன விவரங்களை வைத்துக் கொண்டு அமைச்சர்களுக்குள் விவாதமே நடந்திருக்கிறது.
அப்போது அமைச்சர்கள், “நம் மாவட்டத்துக்கு துணை முதல்வர் வருகிறார் என்றால், நமக்கே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட அமைச்சரின் துறை தொடர்பாக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி கூட அந்தத் துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை.
சமீபத்தில் கூட ஒரு அமைச்சர், தனது துறையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி கடைசிநேரத்தில் அறிந்துகொண்டு பதறியடித்து காரை எடுத்துக் கொண்டு ஓடினாரே, நாமே இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்.
இந்த வேல்முருகன் என்னன்னா, அமைச்சர்கள் அதிகார போதையில் இருக்கிறார்கள் அப்படி இப்படி என்று சொல்கிறாரே” என்று வேதனையாக சிரித்துள்ளனர்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!
Comments are closed.