என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாய பயிர்களை அழித்து என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவதை கண்டித்து நெய்வேலியில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் என்எல்சி தலைமை அலுவலகத்தில் நுழைய முயன்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். இதனால் காவல்துறையினர் வாகனம் மீது பாமகவினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விலை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் NLC நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதோடு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செந்தில் பாலாஜி பதவி பறிப்பு வழக்கு : காரசார வாதம்!
அண்ணாமலை நடைபயணம்: மதுரை வந்தடைந்தார் அமித்ஷா