பிற அரசியல் கட்சிகள் மற்றும் அதன் நிர்வாகிகளை சமூக வலைதளங்களிலோ, காணொலிகளிலோ தரக்குறைவாக விமர்சிக்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று (டிசம்பர் 1) உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் செயல்படும் எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தோ, அமைப்பு குறித்தோ, அதன் தலைமைகள் குறித்தோ, அதன் பொறுப்பாளர்கள் குறித்தோ பொதுவெளியிலோ, சமூக வலைத்தளங்களிலோ, காணொளிகளின் ஊடாகவோ, தனிப்பட்ட நேர்காணல்களின் மூலமாகவோ அவர்களை அவமதிக்கும் வகையில் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது.
நம் பணி என்பது உண்மையும் நேர்மையுமாக தமிழ்நாட்டு தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் அவர்களின் உரிமைகளை காக்கும் வகையில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர இது போன்ற குழு விவாதங்களில் ஈடுபடுவது அல்ல.
இது போன்ற செயல்கள் தமிழர் உரிமைகளுக்காக போராடும் கட்சிகள் மற்றும் அமைப்புகளான நமது தொப்புள் கொடி உறவுகளுக்குள்ளேயே தேவையற்ற மன வருத்தங்களையும், பகைமைகளையும் மட்டுமே உருவாக்கும் இது நமது நோக்கமல்ல.
இதுவரையில் மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் நம்மை விமர்சித்திருந்தாலும் அதற்கு எதிர்வினையாக சில காணொளிகளும் முகநூல் பதிவுகளும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அது போன்ற செயல்களும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். எவர் போற்றினாலும் எவர் தூற்றினாலும் எப்போதும் போல நம்முடைய பணியை தமிழ்நாட்டிற்கும், தமிழீழத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் உறுதியாக களத்தில் நின்று மேற்கொள்வோமென்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி இது போன்ற கட்டுப்பாடற்ற செயல்களில் ஈடுபடும் பொறுப்பாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…