இன்று (அக்டோபர் 9) தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்குள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.
இது தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால்… வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் கார் விவகாரம் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பொதுவாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் போது தலைமைச் செயலக வளாகத்துக்குள் எம்.எல்.ஏ.க்களின் கார்கள் அனுமதிக்கப்படமாட்டாது. முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கார்கள் மட்டுமே உள்ளே நிறுத்த அனுமதிக்கப்படும்.
கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வரும் எம்.எல்.ஏ.க்களின் கார்கள் தலைமைச் செயலகத்துக்கு எதிரே இருக்கும் வெளிப்புற பார்க்கிங்கில் தான் நிறுத்தப்படும்.
ஓட்டுநர்கள் எம்.எல்.ஏ.க்களை பேரவை வளாகத்துக்குள் கொண்டு வந்து இறக்கிவிட்டு காரை வெளியே எடுத்துச் சென்று நிறுத்திவிடுவார்கள்.
பின்னர் கூட்டம் முடிந்ததும் யூ டர்ன் எடுத்து வந்து எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் அனைவரது கார்களும் புறப்படும் என்பதால் சட்டப்பேரவைக்கு வெளியே போக்குவரத்தும் ஸ்தம்பித்துவிடும்.
இதனால் எம்.எல்.ஏ.க்கள் தங்களது கார்கள் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அப்படிதான் இன்று காருக்கு காத்துக்கொண்டிருந்த வேல்முருகன் எம்.எல்.ஏ, அருகில் இருந்த சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க்கிடம், “நான் ஒரு கட்சியின் தலைவர். எனக்கு அதிகமான திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருக்கிறது. தலைமைச் செயலக வளாகத்தில் எதிரில் இருக்கும் வெளிப்புற பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வந்தால், கூட்டத்தொடர் முடிந்து மீண்டும் கார் வருவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் மட்டுமாவது எனது காரை உள்ளே நிறுத்த இடமும் அனுமதியும் வேண்டும்” என்றார்.
உடனே அருகில் இருந்த இன்ஸ்பெக்ட்டரை அழைத்த கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் கார் நம்பரை நோட் செய்துகொண்டு தலைமைச் செயலக வளாகத்துக்குள் நிறுத்த அனுமதி கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி நாளை முதல் கூட்டத்தொடர் முடியும் வரை வேல்முருகனின் காரை உள்ளே நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வணங்காமுடி, பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!
அதிமுக பாஜகவை பாதுகாக்கிறது: அமைச்சர் ரகுபதி
🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕