velmurugan appavu tn assembly

’செய்யலைன்னா செய்யலைனுதான் சொல்ல முடியும்…’ -சட்டமன்றத்தில் வேல்முருகன்- அப்பாவு வாக்குவாதம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (டிசம்பர் 9) கேள்வி நேரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி எம்ஏல்ஏ வேல்முருகன் பேச்சில் சிலவற்றை, அவைத் தலைவர் அப்பாவு அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்.

இதனால் வேல்முருகனுக்கும், அவைத் தலைவர் அப்பாவு- அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கேள்வி நேரத்தில் பேசிய வேல்முருகன்,

“தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது எனது பண்ருட்டி தொகுதியில் உள்ள பகண்டை, பெரிய பகண்டை, சின்ன பகண்டை, குமாரமங்கலம், தொரப்பாடி, பட்டாம்பாக்கம், நெல்லிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி, மக்கள் மிகப்பெரிய துயரத்தை சந்திக்கிறார்கள்.

அதனால் அமைச்சர் துரைமுருகன் அவர்களை நான்காண்டுகளில் முதல் முறையாக சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தேன்.

அதில் பகண்டையில் தடுப்பணையும், வெள்ளம் ஊருக்குள் வராமல் இருக்க, தடுப்புச் சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தேன்.

தாங்களும் அதற்கான முயற்சிகளை எடுத்து துறை செயலாளருக்கு அறிவுறுத்தினீர்கள்.

ஆனால் இதுவரை எங்கள் தொகுதிக்கு தங்கள் துறையில் இருந்து சிறு நற்பணிகளும் நடைபெறவில்லை” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நோக்கி பேசினார்.

அப்போது அவைத் தலைவர் அப்பாவு, ” அதை (சிறு நற்பணிகளும் நடைபெறவில்லை) நீக்கிருவோம்” எனக் கூற, அதற்கு எம்எல்ஏ வேல்முருகன், “செய்யவில்லை என்றால், செய்யவில்லை என்றுதான் கூற முடியும்” என்று பதிலளித்தார்.

இதற்கு அவைத் தலைவர் அப்பாவு ” எதைச் செய்யவில்லை என்று குறிப்பிட்டு கூற வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. அதனால் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடுகிறேன். அமைச்சர் துரைமுருகன் இதற்கு பதிலளிப்பார்.” என்று சற்று ஆவேசமாகவே கூறினார்.

ஆனால் துரைமுருகன் பதிலளிப்பதற்குள் குறுக்கிட்டு பேசிய வேல்முருகன் “இருங்கள் நான் முடித்துவிடுகிறேன்.

உடனடியாக தடுப்பணை, வெள்ளத் தடுப்பு சுவர்கள் கட்டித்தரப்படுமா? ” என்று கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் (வேல்முருகன்) மூத்த உறுப்பினர். குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது. எதை வேண்டும் என்பதை கேட்பதுதான் கேள்வி” என்று கூறி அமைச்சர் துரைமுருகனை பதிலளிக்கக் கேட்டுக் கொண்டார் அவைத் தலைவர்.

பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்,

“இந்த கூட்டத் தொடரில் தடுப்பணை, தடுப்புச் சுவருக்கான நிதி ஒதுக்க வேண்டும் என்று நிதி ஒதுக்குவது குறித்த வழிமுறைகளை அறியாமல் உறுப்பினர் சொல்கிறார் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டின் நிதி ஆதாரத்தை பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று பதிலளித்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

இன்று கூடுகிறது சட்டமன்றம்… டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம்!

முதல் நாளே இப்படியா? ஷாக் கொடுத்த தங்கம் விலை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts