சட்டப்பேரவையில் துணைக் கேள்வி கேட்க அனுமதிக்காதது தொடர்பாக வேல்முருகன் – சபாநாயகர் அப்பாவு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள வேல்முருகன், உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுவதும், கேலி கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது.
கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். சபாநாயகர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக எழுந்து கேள்வி கேட்க அனுமதி அளித்தார். சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய துணைக் கேள்விக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளிக்க எழுந்தார்.
உடனே எழுந்து குறுக்கிட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வேல்முருகன் கோபமாகப் பேசினார்.
பேரவைத் தலைவரே இது நியாயமா? 3 நாட்களாக அவையில் துணைக் கேள்விக்கு வாய்ப்பு கேட்கிறேன் தர மறுக்கிறீர்கள் என சத்தம் போட்டார்.
அதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “வேல்முருகனுக்கு கடந்த மார்ச் 24, 28 ,30 ,31 ஆம் தேதிகளில் கேள்வி கேட்கவும் துணை கேள்வி கேட்கவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முக்கிய தீர்மானங்களின்போது கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தொடர்ந்து பேச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
எல்லா நாளுமே கேள்வி கேட்பதற்கும் துணை கேள்வி கேட்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மரபு கிடையாது. பல உறுப்பினர்கள் இதுவரை ஒரு முறை கூட கேள்வி கேட்காமல் இருக்கிறார்கள்.
கட்சி சார்பிலோ உள்நோக்கத்தோடோ யாருக்கும் கேள்வி கேட்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்கக் கூடாது என்பது எனக்கு தெரியும். எந்த பாகுபாடும் இல்லாமல் தான் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அவையில் சத்தம் எல்லாம் போடக்கூடாது, மிரட்டல் விடுவதெல்லாம் கூடாது” என்று எச்சரித்து வேல்முருகன் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன்,”மூன்றாவது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து அவை கூடுகின்ற ஒவ்வொரு நாளும் சரியாக ஒன்பது மணியில் இருந்து ஒன்பது அரை மணிக்குள் சபாநாயகர் அறைக்கு சென்று என்னுடைய கவன ஈர்ப்பு தீர்மானங்களையும், ஒத்திவைப்பு தீர்மானங்களையும், பூஜ்ய நேரத்தில் இந்த பிரச்சனையை நான் எழுப்பப்போகிறேன் என்பதையும் முறையாக சபாநாயகருக்கு தெரிவித்து வருகிறேன்.
அந்த வகையில் நேற்று எனது தொகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்கிற ஒரு துணைக்கேள்வி கேட்பதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரியிருந்தேன். சபாநாயகர் அதற்கான அனுமதியை எனக்கு தந்தார். ஆனால் கேள்வி நேரத்தின் போது நான் எழுந்து துணைக்கேள்வி கேட்டு கை உயர்த்திய போது அனுமதியை மறுத்துவிட்டார்.
எனது தொகுதி சார்ந்த நிஷா என்ற 18 வயது மாணவி நீட் பயிற்சி மையத்திற்கு சென்று திரும்பும்போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மான கடிதம் வழங்கியும் சபாநாயகர் பேச அனுமதி வழங்கவில்லை. சபாநாயகர் மூத்த உறுப்பினர். அவரை ஒருபோதும் மிரட்டுவது போல் பேசியது கிடையாது. ஆனால் அவர் நான் மிரட்டுவது போல அவைக்குறிப்புகளில் பதிவு செய்து வருவது ஏற்புடையதல்ல”என்று வேல்முருகன் கூறினார்.
தொடர்ந்து பேசிய வேல்முருகன், “சட்டம் படித்த நான், சட்டமன்ற விதிகளை தெரிந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றபோது, நான் மிரட்டுவது போல அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுவதும், கேலி கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மூத்த உறுப்பினரான என்னை கடைசி இருக்கையில் அமரவைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை எனக்கு முன் அமர வைப்பது எந்த சட்டமன்ற விதிகளில் வருகிறது என்று தெரியவில்லை” எனச் சாடினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!
இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!