வேளச்சேரியில் கட்டிமுடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் இருந்த மற்றொரு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 17) திறந்து வைத்தார்.
2016 ஆம் ஆண்டு முதல் ரூ.108 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை 2021 நவம்பர் 1ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தரமணி – வேளச்சேரி 100 அடி சாலையை இணைக்கும் பாலமாகும்.

இந்நிலையில் 100 அடி சாலை முதல் தாம்பரம் செல்லும் மற்றொரு மேம்பாலம் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த மேம்பாலத்தை திறக்க மாநகராட்சி சார்பில் ரூ.45 லட்சம் செலவில் 82 கம்பங்கள் நட்டு விளக்குகள் பொறுத்தப்பட்டன.
பாலத்தை திறப்பதற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இன்று (செப்டம்பர் 17) முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்தபடி இரண்டாவது மேம்பாலத்தைத் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால் வேளச்சேரி, விஜயநகர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
பிரியா