திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அவரது பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கடலூர் பழையபட்டினத்தில் கிருஷ்ணசாமி – மீனாட்சியம்மை ஆகியோருக்கு 1933ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிறந்தார்.
அவர் 11 மாத குழந்தையாக இருந்தபோது தாய் இறந்துவிட, அவரது சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார்.
கி.வீரமணிக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் சாரங்கபாணி என்பதாகும். ஆனால் அவருடைய ஆசிரியரான ஆ.திராவிடமணி என்பவர், சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி கி.வீரமணி என்று அழைத்தார்.
பள்ளிகளில் பேச்சாற்றலை வெளிப்படுத்திய கி.வீரமணியை அவரது தலைமை ஆசிரியர் மேலும் வடிவமைத்தார்.
தொடர்ந்து, கி.வீரமணியையும் திராவிட இயக்கத்துக்குள் அழைத்துச் சென்றார். இயக்கச் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டிய அவர், தந்தை பெரியார் கலந்துகொண்ட மாநாட்டில் பேசி பலரது பாராட்டையும் பெற்றார்.
இப்படி, படிப்படியாக தன்னை இயக்கத்துக்குள் வளர்த்துக்கொண்ட கி.வீரமணி, தற்போது திராவிட இயக்கத்தின் போர்வாளாக உள்ளார்.
இந்த நிலையில், அவர் இன்று தன்னுடைய 90வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா நடைபெற இருக்கிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் பாராட்டுரை வழங்க உள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
கிச்சன் கீர்த்தனா : புரொக்கோலி பாலக் கூட்டு
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!