வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களில் இருந்து வந்த முதலீட்டை திமுக அரசு தனது அலட்சியத்தால் விரட்டியடித்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 30-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு எங்கும் கமிஷன் எதிலும் கமிஷன் என்கிற ஆக்டோபஸ் குணத்தால் ஃபாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா நிறுவனங்களில் இருந்து தமிழகத்திற்கு வர இருந்த 2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை விரட்டியடித்ததாக குற்றம் சாட்டினார். தமிழகத்தின் தொழில் வளத்தை பெருக்குவதற்கு பதில் தங்களது குடும்ப நலனை பெருக்குவதில் ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதாக அவர் விமர்சித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை 31) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்திற்கு வரும் புதிய முதலீடுகளையும் இளைஞர்களுக்கு கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகளையும் பொய்ப்பிரச்சாரம் மூலம் எடப்பாடி பழனிசாமி கெடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வேதாந்தா, ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடுகள் குறித்து அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறியாமையில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“வேதாந்தா நிறுவனத்திற்கு சுற்றுச் சூழல் பாதிப்பு காரணங்களுக்காக மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாக துப்பாக்கிச் சூடு நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு இது தெரியாமல் போனதில் வியப்பில்லை. பாக்ஸ்கான் நிறுவனத்துடனான உறவு 2006-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சிறப்பாக இருப்பதாகவும் இதனால், பெருமளவில் முதலீடுகளும், பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவன தலைவரின் இந்தியப் பயணத்தின் போது மின்வாகனம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் செய்ய உள்ள முதலீடுகளை தமிழ்நாட்டில் நிறுவ அழைப்பு விடுத்தோம். அதை பரிசீலிப்பதாக பாக்ஸ்கான் நிறுவனமும் தெரிவித்துள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் அதே செமி கண்டக்டர் திட்டங்களைத் தனியாகச் செயல்படுத்திட பரிசீலித்து வருகிறது என்பதும்- அதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதுமே உண்மை” என்று கூறியுள்ளார்.
மேலும் தங்கம் தென்னரசு, “கடந்த ஒரு ஆண்டில் செமி கண்டெக்டர் மற்றும் மின்வாகனத் துறைகளில் பல முதலீடுகளை மாநில அரசு ஈர்த்துள்ளது. சமீபத்தில், IGSSV நிறுவனம், புராஜக்ட் சூரியா (Project Suria) என்ற ஒரு செமி கண்டக்டர் புனரமைப்பு (Semiconductor Fab) உயர் தொழில்நுட்பப் பூங்காவை 300 ஏக்கர் பரப்பளவில் அமைத்திட, தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், 25,600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் மற்றும் 1500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமின்றி, இப்பூங்காவில் அமைக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மூலமாக 25,000 நபர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வாய்ப்பு உள்ளது.
இதுமட்டும் இன்றி, கடந்த ஒரு வருடத்தில், 11,580 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 28,612 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 22 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லூகாஸ் TVS, TI குழுமம், SRIVARU மோட்டார்ஸ், BFW, சிர்மா SGS போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிட முன்வந்துள்ளன” என்றும் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒவ்வொரு நாளும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்குடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், “உள்கட்சி அரசியல் குழப்பத்தில்” இதனை மறந்து விட்டு- தன் இருப்பை காட்டிக் கொள்ள இப்படியொரு அரைகுறை அறிக்கையை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் பெயரளவில் “விளம்பரத்திற்காக” போடப்பட்டவை. அவற்றில் செயல்பாட்டிற்கு வந்த திட்டங்கள் மிக மிக குறைவு. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டு காலத்திலேயே, 2,02,220 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 192 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்திட்டங்களை செயல்படுத்த தொழில்துறை மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களிலும் பின்தங்கிய மாவட்டங்களிலும் பெருமளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக, தூத்துக்குடியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1,150 ஏக்கரில் அமையவுள்ள பன்னாட்டு அறைக்கலன் பூங்கா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
”முதலமைச்சர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ள லட்சிய இலக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்திட அரசு உறுதி பூண்டுள்ளது. தொழில் தொடங்க வருவோரிடம் அ.தி.மு.க. ஆட்சியில்- அதுவும் எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர், அப்போதிருந்த “கலாச்சாரத்தை” மனதில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சி மீது கல்லெறிய வேண்டாம். “பொய் பிரச்சாரத்தில்” ஈடுபட்டு- தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம்” என்றும் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்வதாகவும் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ராஃபிக்