ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் இன்று (டிசம்பர் 8) தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மாநில அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும் விசிக இடம்பெற்றுள்ளது. எனவே, புதிதாக ஒரு கூட்டணியில் விசிக இடம்பெற வேண்டும் என்பதற்கான தேவையே எழவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதை ஏற்கனவே பலமுறை விளக்கியிருக்கிறேன். மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
விசிக குறிவைக்கப்படுகிறது என்பதை விட திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கக்கூடாது, அதனை சிதறடிக்க வேண்டும் என்பது தான் அதிமுக, பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு விசிகவை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லை.
கட்சியில் துணை பொதுச்செயலாளர்கள் பத்து பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஆதவ் அர்ஜூனா. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறுகிறபோது தலைவர், பொதுச்செயலாளர் அடங்கிய உயர்நிலைக்குழுவில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் நடைமுறையாக கொண்டிருக்கிறோம்.
அதிலும் குறிப்பாக விசிகவில், தலித் அல்லாத ஒருவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை என்று வருகிறபோது, தலைவர், பொதுச்செயலாளர் கவனத்திற்கு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்தளவிற்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நடைமுறையாக கொண்டிருகிறோம்.
தலித் அடையாளத்தோடு இந்த இயக்கம் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தது. இது முழுமையான ஒரு அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்பதற்காக, தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் விசிகவில் அதிகார மையத்திற்கு வர வேண்டும் என்பதற்காக 2007-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியில் தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தலைவரின் கடமை. ஆதவ் அர்ஜூனாவின் அண்மைக் கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை கட்சியின் முன்னணி தோழர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அதை தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று பொதுச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.