Thirumavalavan interview about contesting from Chidambaram

தொகுதி மாறுகிறேனா? திருமா பதில்!

அரசியல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்த கட்டடத்தை திறந்து வைத்தல், நெடுஞ்சேரி புத்தூரில் பிரபா பல்பொருள் அங்காடியை திறந்து வைத்தல், அதே பகுதியில் 60 அடி உயர மணிவிழா கொடி கம்பத்தில் கட்சிகொடியை ஏற்றி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (நவம்பர் 6) கலந்துகொண்டார்.

பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் திருமாவளவன்.

அப்போது அவர், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எஸ் டி, எஸ் டி பணியாளர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 17ம் தேதி சிதம்பரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மோடி அமித் ஷா ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததால் அதானி, அம்பானி ஆகியோர் தான் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கிறார்களே தவிர, ஓபிசி மக்கள் பயன்பெறவில்லை.

இனியும்  ஏழை எளிய மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது. அவர்கள் யாருக்கானவர்கள் என்று மக்கள் புரிந்துகொண்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது குறித்து பேசிய திருமாவளவன், “இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக மட்டுமே இதனால் பாதிக்கப்படுகிறது என்று நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இது தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திமுகவை அச்சுறுத்துவதாக நினைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது” என கூறினார்.

கூட்டணி குறித்து பேசிய அவர், “ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான இடங்கள் வேண்டும் என்று கேட்பது வாடிக்கைதான். ஆனால், 10 கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணி என்பதை கருத்தில் கொண்டு எங்களுடைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும்” என தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடவுள் எதிர்ப்பாளர்கள் சிலைகளை அகற்றிவிடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி பேசிய அவர், “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று அழைப்பார் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது” என பதிலளித்தார்.

எடப்பாடி பழனிசாமி உங்களிடம் போனில் பேசிய பிறகு அதிமுகவுடன் விசிக செல்கிறது என்றெல்லாம் பேசப்படுகிறது.  இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வோம். இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவோம். இதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்கு அறிவார்.

அதிமுக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியமானது. கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. தமிழ்நாட்டில் எதிர்கட்சி பாஜகதான் என்று காட்டிக்கொள்ள எல்லா வேலைகளையும் செய்து வருகிறது.

உறுப்பினர்களே இல்லாத கட்சிக்கு நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய வகையில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால் பணம் எங்கிருந்து வருகிறது. யார் தருகிறார்கள், இதற்கு பின்னணியில் இருப்பது யார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

அண்ணாமலையின் நடைப்பயணத்தில் தொண்டர்களாக பங்கேற்கக்கூடியவர்கள் அதிமுக, பாமக கட்சியை சார்ந்த தொண்டர்கள் தான். பாஜக தொண்டர்கள் அண்ணாமலையுடன் நடந்து செல்லவில்லை.

இதன்மூலம் அவர்களின் அரசியலுக்கு அதிமுக, பாமகவில் உள்ளவர்களை பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது அதிமுகவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

திமுகவை எதிர்க்கிற வலிமை கொண்டதாக அதிமுக இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

அதிமுக தலைமையில் தான் பாஜகவில் 4 பேர் வெற்றி பெற்றார்கள். எனவே பாஜகவுக்கு கிளைகள், தொண்டர்கள் கிடையாது” என விமர்சித்தார்.

வரும் எம்.பி. தேர்தலில் சிதம்பரம் தொகுதி இல்லாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்கு போட்டியிடவே  ஆர்வம், ஏற்கனவே 5 முறை போட்டியிட்டு, 2 முறை வெற்றி பெற்றிருக்கிறேன்.

வெற்றி பெற்றாலும், இல்லை என்றாலும், மக்கள் ஆதரித்தாலும், இல்லை என்றாலும் இந்த தொகுதியை நேசிக்கிறவன். இந்த தொகுதிக்கு எதிராக செயல்பட்டதில்லை.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என கூறினார் திருமாவளவன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு: காவல்துறை

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *