எதிர்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்துவார் என்றால், அவரோடு சேர்ந்து போராட தயார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 66 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை இன்று (மே 16) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இது ஆறுதல் அளிக்கிறது என்றாலும் கூட இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
விசிகவை பொருத்தவரை, மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் மதுவிலக்கு கொள்கையை தேசிய கொள்கையாக மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் பெருகும் என்ற காரணத்தைக் கூறி மதுவிற்பனையை அரசே ஏற்று நடத்துவது ஏற்புடையது அல்ல. மதுவிலக்கையும், கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கையையும் சமகாலத்தில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்” என்றார்.
அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த திருமாவளவன், “நாங்கள் கூட்டணி கட்சி தான் என்றாலும், மதுவிலக்கை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கூட்டணி கட்சி தலைவர்களை கைகாட்டும் எடப்பாடி இதுவரை மது ஒழிப்பிற்காக எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறார்?
அதேநேரத்தில் எதிர்கட்சிக் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்துவார் என்றால், அவரோடு சேர்ந்து குரல் கொடுக்கவும், போராடவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றார்.
திமுக கூட்டணி கட்சியில் விசிக முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், மதுவிலக்கிற்கு எதிராக எடப்பாடியுடன் போராட தயார் என்று திருமாவளவன் கூறியுள்ளது தற்போது அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மெத்தனாலுக்கு தமிழ்நாட்டில் தடையா?: மா.சுப்பிரமணியன்
மதத் தலைவர்கள் வெளியிட்ட “பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்” போஸ்டர்!