”மாணவர்களிடையே சாதி வெறுப்பு திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது”: திருமாவளவன்

Published On:

| By Monisha

nanguneri issue thirumavalan speech

இந்தியாவில் மாணவர்களிடையே சாதி வெறுப்பு திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது என்று வி. சி. க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திராதேவி மீது கொலை வெறி தாக்குதல், சாதி மதம் குடி பெருமை எனும் பெயரில் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் சாதிய மதவாத அமைப்புகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வி. சி. க தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்ட 500 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய வி. சி. க தலைவர் திருமாவளவன், “ஆகஸ்ட் 21ஆம் தேதி நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை சகமாணவன் தாக்கி விட்டான் என்று அதை எளிதாக கடந்து போய்விட முடியாது. அதன் பின்னணியில் உள்ள சாதிய வன்மத்தை, கொடூரத்தை அரசுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இந்த தாக்குதலை நடத்தியவர்களும் மாணவர்கள்தான். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற ஒரு தயக்கம் இருக்கிறது.

தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் எதிர்காலம் உள்ளது. அவர்களும் நல்ல கல்வியைப் பெற வேண்டும். நல்ல ஒழுக்கத்தையும் வாழ்வையும் பெற வேண்டும் என்று நம் மனதில் தோன்றுகிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நிகழ்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

விசிக டிபிஐ இயக்கமாக இருந்தபோது Dalit Student Pandthers (DSP) எனும் அமைப்பை உருவாக்கினோம். ஆனால் இந்த அமைப்பு செயல்பட்டால் அது மாணவர்களிடையே சாதி ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்தும் என்று உணர்ந்து அப்பொழுதே அந்த மாணவர் அமைப்பை கலைத்து விட்டேன்.

மாணவர்களிடையே நிலவும் இந்த சாதி வெறுப்பு மனோபாவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

சாதியவாத சங்பரிவார் அமைப்புகள் தங்களின் ஆதாயத்திற்காக மக்களை சாதி வெறியை தூண்டி பிளவுபடுத்துகிறார்கள். அதன் விளைவாகத்தான் இன்று சின்னதுரையும் சந்திரா தேவியும் சாதி வன்மத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சாதி ஒழிப்பை முன்னிறுத்தாமல் தமிழ் தேசியம் சாத்தியப்படாது.

எங்கள் கோரிக்கை அந்த மாணவர்களை கண்டியுங்கள் என்பது அல்ல. சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்படிப்பட்ட சாதிய அடக்குமுறைகள் நிகழாமல் இருக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் அரசிற்கு எங்களது கேள்வி.

சாதிய அடக்குமுறைகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று பேசினார்.

பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் கைது!

’என்ன கிண்டல் பண்ணாலும்…’: நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து உதயநிதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share