ஆணவக்கொலை: தனிச்சட்டம் இயற்ற தயக்கம் ஏன்? – திருமா கேள்வி!

Published On:

| By Selvam

மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற தயக்கம் காட்டுவது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதி ஆணவ கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதியில் நடைபெற்ற சாதி ஆணவக் கொலையை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கிருஷ்ணகிரியில் இன்று (ஏப்ரல் 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியபோது, “கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு காவல்துறையினர் எதிராக உள்ளனர்.

ஆணவக்கொலையைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற ஏன் தயக்கம் காட்டுகிறது. தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி விசிக மத்திய அரசிற்கும் தமிழக அரசிற்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆணவக் கொலை தடுப்பு சட்டம் என்பது பெண்கள் பாதுகாப்பு சட்டம் தான். ஆண்களுக்கு எதிரான கொலையாக மட்டும் இதனை பார்க்க கூடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எளிய சாதியை சேர்ந்த தலித்துகள் தான் கொல்லப்படுவார்கள்.

உலகம் முழுவதும் ஆண்டிற்கு 5000 பேர் சாதி ஆணவக் கொலைகளால் கொல்லப்படுகிறார்கள் என்று 2013-ஆம் ஆண்டு ஐநா புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 1000 பேர் கொல்லப்படுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு தோழமை கட்சி என்ற பொறுப்புணர்வுடன் சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

12 மணி நேர வேலை: கலைஞர் சொன்னதை மீறிய ஸ்டாலின்

“தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பபெற வேண்டும்”: எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share