30 ஆயிரம் இருக்கைகள், புத்தர் முதல் அண்ணா வரை… விசிக மாநாட்டு பணிகள் மும்முரம்!

அரசியல்

அக்டோபர் 2 நாளை காந்தி ஜெயந்தியை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், நேற்று (செப்டம்பர் 30) மாநாடு நடைபெறும் இடத்தை விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

“இந்த மாநாட்டில் கூட்டணி கட்சிகள் சார்பில் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் வாசுகி,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிரணி தேசிய செயலாளர் ஆனி ராஜா, மதிமுக சார்பில் மருத்துவர் ரொஹையா பேகம், இந்திய யூனியன் முஸ்லீம் லிக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகள் சார்பில் மகளிரணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், மதுக்கடைகளை மூட வேண்டும், மதுவிலக்கு தொடர்பான பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களை அதற்காக பயன்படுத்த வேண்டும். மதுக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று இந்த மாநாட்டின் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

அதேவேளையில், அரசியலமைப்பு சட்டம் உறுப்பு எண் 47-ன் படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மது ஒழிப்பு மாநாட்டு திடலின் முகப்பில் பெரியார், அண்ணா, மார்க்ஸ், காந்தியடிகள், திருவள்ளுவர் மற்றும் திருமாவளவன் ஆகியோரது கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு திடலை சுற்றிலும், மதுவுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மாநாட்டு திடலின் மேடையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விசிக மாநாடு குறித்து அக்கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தோம், “மாநாட்டில் பங்கேற்கும் விசிக மகளிரணி நிர்வாகிகளுக்கு கட்சி கொடி அமைப்பை போன்றே  நீலம், சிவப்பு நிறத்தில் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட சேலைகள் ஒவ்வொரு தொகுதிக்கும் 200 மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலில் 30 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் மாநாட்டு திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இ டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி இருக்கும் ஓட்டல்களில் நாளை மட்டும் 60 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி விற்பனை செய்ய கடை உரிமையாளர்களிடம் பேசியிருக்கிறோம். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார்கள்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செப்டம்பர் மாசத்துல இத்தனை லட்சம் பேர் மெட்ரோ பயணமா?

அன்புமணியை காப்பாற்ற ராமதாஸ் பாஜகவில் தஞ்சம்: ஆர்.எஸ்.பாரதி

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *