வைஃபை ஆன் செய்ததும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றிய அப்டேட்டுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று ஜூன் 26 ஆம் தேதி மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
அதன் பிறகு சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் பற்றி தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திரசேகர் அறிவித்தார்.
திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முறை அங்கீகாரம் இல்லாமல் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இலையில்லாத மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு அவர்களின் சின்னமான இலையுடன் கூடிய மாம்பழம் கிடைக்குமா என்ற கேள்வி டாக்டர் ராமதாஸ் முதல் அக்கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில் மாம்பழத்தையே பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்.
இதைவிட திமுக தரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிற இன்னொரு விஷயமும் நடந்திருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த பானை சின்னத்தை விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் நான்கு சுயேச்சைகள் கேட்டிருக்கிறார்கள்.
நான்கு சுயேச்சைகள் பானை சின்னத்தை கேட்டதால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிவசக்தி என்ற சுயேச்சை வேட்பாளருக்கு பானை சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தில் பானை சின்னத்தை நான்கு சுயேச்சைகளை வைத்து கேட்கச் செய்திருக்கிறார்கள் பாமகவினர். அதில் ஒருவருக்கு பானையும் கிடைத்திருக்கிறது. பானை சின்னம் பெற்ற சுயேச்சை வேட்பாளர் சிவசக்தி, பாமக வேட்பாளர் அன்புமணியின் ஊரான பனையபுரத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்.
அதாவது விக்கிரவாண்டி தொகுதியில் இருக்கும் தலித் மக்கள் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில்தான் வாக்களித்தார்கள். இப்போது மீண்டும் பானை சின்னம் போட்டியில் இருந்தால், பட்டியல் சமுதாய மக்கள் பானைக்கே வாக்களிப்பார்கள். திமுகக்கு சேர வேண்டிய விசிக வாக்குகள் சுயேச்சை பானைக்கு போய்விடும் என்று திட்டமிட்டு கனகச்சிதமாக காய் நகர்த்தியிருக்கிறது பாமக.
ஆனால் திமுகவும் விசிகவும் இதை ஏன் முன்கூட்டியே சிந்திக்கவில்லை என்ற கேள்வி விக்கிரவாண்டி திமுகவினர் மத்தியிலேயே எழுந்திருக்கிறது.
சில திமுக நிர்வாகிகளோ, ‘ இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. அதனால் எப்படியும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்ற மிதப்பில் இருக்கிறார்கள் திமுக நிர்வாகிகள். அதனால்தான் சின்னங்கள் விஷயத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அதன் விளைவு தான் இது என்கிறார்கள்.
சுயேச்சைக்கு பானை சின்னம் அறிவித்த பிறகு விடுதலை சிறுத்தைகளும் திமுகவினரும் தேர்தல் அலுவலரிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக ஆகியிருக்கலாம். ஆனால் பானை சின்னம் இன்னும் விசிகவின் சின்னமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதுவரைக்கும் பானை சின்னம் சுயேச்சை சின்னம் தான் என்று பதில் அளித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை மாநில தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர் வரை எடுத்துச் செல்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தயாராகி விட்டார்கள். ஆனபோதும் இது போன்ற தேர்தல் நேரத்து சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே ஆராய்ந்து அதை தடுப்பதற்கு திமுகவின் வழக்கறிஞர்கள் ஏன் தவறிவிட்டார்கள் என்ற கேள்வியும் விடுதலை சிறுத்தைகள் மத்தியில் எழுந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை : முதல்வர் உத்தரவு!
ஆயில் என்ற பெயரில் மெத்தனால்: காட்டிக் கொடுத்த ஜிஎஸ்டி நம்பர்! -தொடரும் கள்ளக்குறிச்சி விசாரணை!
தேனியில ஓபிஎஸ் என்ற பெயரில் பலரும் சுயேச்சையாக எப்படி போட்டியிட வைக்கப்பட்டார்களோ, அதே சிஸ்டம் இங்கேயும்.