விசிகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமன அறிவிப்பு எப்போது என்ற கேள்விக்கு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.
கடந்த ஜூலை மாதத்தில் ‘விசிகவில் இனி தேர்தல் ஆணையத்தின் அலகுகளின்படி கட்சி அமைப்புகள் செயல்படும்’; என உயர் நிலை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதாவது இப்போது வருவாய் நிர்வாக அலகுகளின் அடிப்படையில் செயல்பட்டு வரும் கட்சி அமைப்பை, தேர்தல் ஆணைய அலகுக்கு ஏற்ப மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
இப்போது விசிகவில் 144 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இனிமேல் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் ஒவ்வொரு மாவட்ட அலகாக கருதப்பட்டு, 234 மாவட்டங்களாக கட்சி பிரிக்கப்படும். இதன் மூலம் கட்சிக்குள் அதிகார பரவலாக்கல் செய்யப்படும் என்பதுதான் இதன் அடிப்படை.
நவம்பர் மாதம் மாவட்ட மறு சீரமைப்பு நடவடிக்கைகள் முடிவடையும் என்று திருமா ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் இடையில் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டுப் பணிகள் குறுக்கிட்டதால் மாவட்ட சீரமைப்புப் பணிகள் தாமதமானது.
இதற்கிடையில் அவ்வப்போது நேரலை வீடியோவில் தோன்றி, மாவட்ட மறு சீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமாவதன் காரணம் பற்றி விளக்கி வருகிறார் திருமா. இந்த வகையில் நவம்பர் 4 வீடியோவில்… பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் ஆகியோர் சூழத் தோன்றி சில அப்டேட்டுகளை அறிவித்துள்ளார்.
இதன்படி, “ஏற்கனவே மாவட்ட நிர்வாக பொறுப்புகளுக்காக 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தோடு தமிழ் மண் இதழுக்கான சந்தா 2 ஆயிரம் ரூபாய் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
மேலும், மாவட்ட வாரியாக மறுசீரமைப்புக் குழுக்களை நியமிக்க இருக்கிறோம். மேலிடப் பொறுப்பாளர்கள், அந்தந்த பகுதி நிர்வாகிகள் அடங்கிய இந்த குழுவிடம் விண்ணப்பங்களை வழங்கலாம். இதோடு டெல்டா மண்டலம், மைய மண்டலம், தென் மண்டலம், வட மண்டலம், மேற்கு மண்டலம் என தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து மண்டல ரீதியான மறு சீரமைப்புக் குழுவும் அமைக்கப்படும்.
மாவட்ட குழுக்கள், மண்டலக் குழுக்களிடம் தங்கள் கருத்துகளை தெரிவித்து, மண்டல குழுக்கள் தலைமையிடம் தெரிவிப்பார்கள். உயர் நிலை குழு கூட்டத்தில் விவாதித்து மாவட்டச் செயலாளர்களின் இறுதிப் பட்டியல் டிசம்பர் இறுதிக்குள் தயாரிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் திருமா.
இந்த நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் தலையீடு அதிகமாக இருப்பதாக மற்ற நிர்வாகிகளிடையே சலசலப்பு இருக்கிறது என்றும், அதன் காரணமாகவே மாவட்ட, மண்டல குழுக்களை இப்போது திருமா அமைத்திருக்கிறார் என்றும் விசிக வட்டாரங்களில் தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து விசிக உள் வட்டாரங்களில் விசாரித்தோம்.
‘விசிகவில் கடந்த வருடம்தான் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்த்தப்பட்டது. ஆதவ் அர்ஜுனாவிடம் கட்சியின் கட்டமைப்பு பற்றிய டேட்டாக்கள் கொடுக்கப்பட்டன. அவர் தனது டேட்டா அனலைஸ் ரிப்போர்ட்டை திருமாவிடம் சமர்ப்பித்து பல்வேறு பவர் பாயின்ட் விளக்கங்களை அவருக்கு அளித்தார்.
அதிகாரத்தில் பங்கு என்று நாம் கட்சிக்கு வெளியே கோரிக்கை வைக்கும் நிலையில், கட்சிக்குள்ளேயே அதிகாரம் கிடைக்காமல் இருக்கும் பலருக்கும் நிர்வாக அதிகாரத்தை நிரவ வேண்டும். இதற்கு தேர்தல் ஆணைய அலகு ரீதியாக கட்சி நிர்வாக அலகையும் மாற்ற வேண்டும் என்பது ஆதவ் அர்ஜுனாவின் ப்ரசன்டேஷன்.இதை ஏற்றுக் கொண்ட திருமா உயர் நிலை குழுவில் இதுகுறித்து விவாதித்தபோது மூத்த நிர்வாகிகள் இதில் ஏற்படும் நடைமுறை சங்கடங்களை விளக்கினார்கள்.
மேலும், இப்போது 144 மாசெக்கள் இருக்கும் நிலையில், இந்த விரிவாக்கல் நடவடிக்கை மூலம் அவர்களின் பதவிகளுக்கு ஆபத்து என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள். ஒரு வருடத்துக்குள் மாசெ பதவியில் இருந்து அகற்றப்படும் பட்சத்தில் அவர்கள் வேறு கட்சிகளுக்கு செல்லும் நடைமுறை கடினங்களை கட்சி எதிர்கொள்ள நேரிடும் என்றும் திருமாவிடம் கூறியிருக்கிறார்கள்.
மேலும், ஏற்கனவே வந்த 4 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆதவ் அர்ஜுனா பார்வைக்கும் சென்றிருக்கின்றன. இந்த அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் யார் யார் தொகுதி மாவட்டச் செயலாளர்கள் என்ற உத்தேசப் பட்டியலையும் ஆதவ் அர்ஜுனா தயாரித்து வருவதாக ஒரு தகவல் கட்சிக்குள் பேசப்பட்டு வருகிறது.
விசிக பொது சமூகத்துக்கான கட்சி என்ற வகையிலும், அதேநேரம் ஆதி திராவிடர்- தேவேந்திர குல வேளாளர்- அருந்ததியர் என தலித்துகளின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஆதவ் அர்ஜுனா சில செயல் திட்டங்களை திருமாவிடம் முன் வைத்துள்ளார். இதில் திருமா இன்ட்ரஸ்டாக இருக்கிறார்.
இதன் மூலம் புதிய மாசெக்கள் தேர்வில் ஆதவ் அர்ஜுனாவின் கை ஓங்கிவிடக் கூடும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மற்ற நிர்வாகிகள்… மாவட்ட ரீதியாக குழு அமைத்து விண்ணப்பங்களை பரிசீலித்து தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அழுத்தமாக கோரிக்கை வைத்தனர்.அதன்படிதான் இப்போது மாவட்ட ரீதியாக மறு சீரமைப்புக் குழுக்களை அமைத்து வீடியோவில் அறிவித்திருக்கிறார் திருமா.
மேலும், ஏற்கனவே இருக்கும் 144 மாவட்டச் செயலாளர்களில் புகார்களுக்கு உள்ளானவர்கள் மட்டும் மாற்றப்படுவார்கள். எல்லாரும் மாற்றப்பட மாட்டார்கள் என்ற உறுதியையும் அவர் அளித்திருக்கிறார்.
திருமாவளவன் மூத்த நிர்வாகிகளையும் விட்டுக் கொடுக்கமாட்டார். அதேநேரம் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச விரும்பும் கட்சியை பரவலாக்க விரும்பும் ஆதவ் அர்ஜுனாவையும் விட்டுக் கொடுக்க மாட்டார். வருகிற பொங்கல் பண்டிகைக்குள் 234 மாவட்டச் செயலாளர்கள் இறுதிப் பட்டியல் வெளிவரும்.
அப்போது கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனா கை ஓங்கியிருக்கிறதா அல்லது மூத்த நிர்வாகிகள் கை ஓங்கியிருக்கிறதா என்று தெரியவரும்” என்கிறார்கள்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்திய உணவுக் கழகத்துக்கு ரூ.10,700 கோடி நிதி… அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!
come back செந்தில்பாலாஜி… calm back நிர்வாகிகள்- கள ஆய்வில் நடந்தது என்ன?