விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு, ராகுல்காந்தி தகுதி நீக்கம், திமுக கூட்டணி, புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சனை, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
அதன் வரி வடிவம் இங்கே….
பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி உருவாகுமா?
பாஜகவை தேசிய அளவில் வலிமையாக எதிர்கொள்ளக்கூடிய கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்கள் மாநில கட்சிகளை தொடங்கியதால் அக்கட்சி சில மாநிலங்களில் தங்களது வாக்கு வங்கியை இழந்தது. இதனை சரி செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சி வலிமை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

பாஜக தனித்த தேசிய கட்சியாக தெரிந்தாலும் மாநில அளவில் வலிமை பெற்ற கட்சியாக இல்லை. பாஜக எதிர்ப்பு சக்திகள் ஒருங்கிணைந்தால் அக்கட்சியை வீழ்த்த முடியும்.
காங்கிரஸ் இரண்டு முக்கியமான வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. காங்கிரசில் இருந்து வெளியேறிய தலைவர்களை ஒருங்கிணைத்து அணிக்குள் இணைக்க வேண்டும். பாஜக எதிர்ப்பு சக்திகளையெல்லாம் ஒருங்கிணைத்து தேர்தலுக்கு பிறகு பிரதமர் குறித்து முடிவு செய்யலாம் என்கிற நிபந்தனையோடு ஓர் அணியாக செயல்பட வேண்டும். இந்த இரண்டு பணிகளை காங்கிரஸ் செய்தால் பாஜகவை நிச்சயமாக வீழ்த்த முடியும். அதற்கான ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பவர் தான் ராகுல் காந்தி.
அண்மையில் அவர் நடத்திய பாரத் ஜோடா யாத்ரா மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நான் நம்புகிறேன். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனுடைய விளைவாக தான் ராகுல் காந்தியை குறிவைத்து பாஜக காய்களை நகர்த்துகிறது.
பாஜகவை எதிர்த்து இந்திய அளவில் நம்பிக்கைக்குரிய ஆளுமையாக ராகுல் காந்தி மட்டும் தான் உள்ளார். அவர் கொள்கை புரிதலோடு தான் பாஜகாவை எதிர்க்கிறார். ஒரு பக்கம் சனாதனமயம், மற்றொரு பக்கம் கார்ப்பரேட்மயம். மிக மோசமான மக்கள் விரோத போக்குகள் தலைதூக்கி இருக்கின்றன என்பதை பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார். எனவே ராகுல் காந்தி குறைத்து மதிப்பிடக்கூடிய தலைவர் அல்ல. அவர் நம்பிக்கைக்குரியவராக, நாட்டை மீட்பதற்குரிய வலிமை பெற்றவராக விளங்குகிறார்.
ராகுல் காந்தியை எதிராக வைத்து தான் இன்றைக்கு பாஜக அரசியல் செய்கிறது. அவர் இளம் வயதுடையவராக இருக்கிறார். இன்னும் 10 ஆண்டுகள் அவரால் வீரியமாக அரசியல் செய்ய முடியும். பாஜகவில் அனைவரும் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தான் இருக்கிறார்கள். பாஜக தலைமை கேள்விக்குறியாக மாறி வருகிறது.
பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். கொள்கை அடிப்படையில் திமுகவிற்கு ஏதேனும் நெருக்கடிகள் இருக்கிறதா? அது கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஒரு முதல்வர் என்கிற முறையில் பிரதமரை வரவேற்பது என்பது சட்டப்பூர்வமான கடமை. பிரதமரை சந்தித்து வரவேற்றதனால் திமுகவின் பாஜக எதிர்ப்பு பொய்யானது என்ற முடிவுக்கு நாம் வர வேண்டிய தேவையில்லை.
பாஜகவை எதிர்ப்பதில் திமுகவிற்கு சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் ஒரு நிலைப்பாடு உள்ளது. அந்த நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை போல பிரதமரை புறக்கணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பிரதமரை வரவேற்றாலும் ஏப்ரல் 12-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்பது பிரதமருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்பது போன்றது தான்.
ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவரை துணை முதல்வராக ஆக்கிவிட்டு ஸ்டாலின் சமூக நீதி அரசியலை பேசலாம் என வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
திமுகவிற்கு எதிராக பாஜக எதிர்கொள்கிற உத்திகளில் இதுவும் ஒன்றாகும். திமுக சமூக நீதியை பேசுகிறது என்பதனாலேயே தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை முதல்வராக்கி விட முடியும் என்பது ஏற்புடையது அல்ல. திமுக என்கிற கட்சி சார்ந்த நிலைப்பாடு அது. அந்த கட்சிக்குள் பெரும்பான்மை என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் ஒருவர் முதல்வராக முடியும்.
ஆந்திராவில் இன்று ஐந்து துணை முதல்வர்கள் பொறுப்பை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் துணை முதல்வர்கள் பொறுப்பை உருவாக்க வேண்டும். அது தலித்துகளுக்கு மட்டுமல்ல, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும். இது விசிகவின் நிலைப்பாடு. ஆனால் இதற்காக திமுக சமூக நீதியே பேசக்கூடாது என்று கூறுவது ஏற்புடைய அரசியல் அல்ல.
பாஜக ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவராக ஆக்கலாம். ஆனால் பிரதமர் ஆக்க முடியுமா? தேசிய கட்சியான பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தலித் சமூகத்தை சேர்ந்தவரை பிரதமர் ஆக்குவோம் என்று வாக்குறுதி அளிக்கட்டும்.
பாஜகவிற்கு ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவரை பிரதமராக்க முடியாததற்கு என்ன காரணங்கள் இருக்கிறதோ அதே காரணங்கள் திமுகவிற்கு தமிழ்நாட்டில் தலித்தை முதல்வராக்க முடியாது என்பதற்கான காரணங்களாகவும் இருக்கின்றன.
ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறுவது சாத்தியமா?
ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருக்கடியாக மாறும். அனைத்து அரசியல்வாதிகளும் அச்சப்படக்கூடிய அரசியலை அவர் பேசுகிறார். தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் ப்ராடெக்ட் என்பதை வெளிப்படுத்துவதற்கு தயங்காதவராக இருக்கிறார். அவர் வகிக்கும் பொறுப்பை மறந்துவிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவே பேசுகிறார். ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பது தான் அவருடைய நோக்கம்.
வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை, பல்வீர் சிங் விவகாரத்தில் திமுகவை விசிக சாஃப்ட் கார்னராக அணுகுகிறதா?
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு, நாமக்கல் அரசு அலுவலகத்தில் பணியாற்றிய காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம், சேலம் ஓமலூரில் விசிக கொடிக்கம்பத்தை காவல்துறை அகற்றியது, குறிஞ்சாங்குளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தபோது என தொடர்ச்சியாக விசிக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கூட்டணியில் இருப்பதால் அரசை எதிர்க்ககூடாது, காவல்துறையை கண்டிக்கக்கூடாது என ஒருபோதும் நாங்கள் தயக்கம் காட்டியதில்லை.

வேங்கை வயல் பிரச்சனையை பொறுத்தவரையில் அதிர்ச்சியும் வேதனையும் நமக்கு இருக்கிறது. அதனால் திமுக முற்றிலுமாக சமூக நீதியை பேச தகுதி இழந்துவிட்டது என்ற முடிவிற்கு நாம் வந்துவிட முடியாது. அப்படி குற்றம் சுமத்த நான் விரும்பவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன், ஆ.ராசா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளை பாஜக டார்கெட் செய்து வேலை செய்வதாக சொல்லப்படுகிறது. அது குறித்து உங்கள் கருத்து?
தேர்தல் அரசியலில் இது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். அவர்கள் நம்மை இலகுவாக வெற்றி பெற விட மாட்டார்கள். அதற்காக நாம் சமரசம் ஆகிவிட முடியாது. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக தான் நாம் பொதுவாழ்க்கையில் இருக்கிறோம்.
இந்தியாவை ஒப்பிடும் போது வேறு எந்த மாநிலத்தை விடவும் தமிழக மக்கள் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் நம்மை கைவிட மாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமியை நீங்கள் ஆளுமை மிக்க தலைவர் என்று கூறியிருந்தீர்கள். ஆளுமை மிக்க தலைவர் எப்படி பாஜகவின் கீழ் செயல்படுவார் என்ற விமர்சனங்கள் எழுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
தவளையை கவ்விய பாம்பை போல அதிமுகவை பாஜக கவ்வியுள்ளது. அப்படி விழுங்கப்பட்டு விடக்கூடாது அதுவும் ஒரு சமூக நீதி இயக்கம் என்ற தோழமை உணர்வோடு சுட்டிக்காட்டினேன்.
ஜெயலலிதா இருந்தால் பாஜக இதுபோன்ற சதி வேலைகள் செய்யாது. அவர் மறைவிற்கு பிறகு சசிகலா தலைமையில் அதிமுக பலப்பட்டு விடும் என்று அச்சப்பட்ட பாஜக உடனே அதில் தலையிட்டு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி சசிகலாவை முற்றிலும் கட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்தது. இதனை அதிமுக தொண்டர்கள் உணர்வார்கள்.

அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் தலைமையாக நிறுவ முயற்சித்தார்கள். அந்த முயற்சியை முறியடித்து எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமைக்கு வந்தார். இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. அதனை அவர் தக்க வைத்து கொண்டார். நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த ஆளுமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
அதிமுகவை ஜெயலலிதா இல்லாமலே ஒரு எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர வைத்திருக்கிறார். அதிமுக நீர்த்து போய்விட்டால் அந்த இடத்தில் பாஜக வந்துவிடும். தமிழக அரசியல் திமுகவா அதிமுகவா என்று 50 ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் திமுகவா பாஜகவா என்று மாறிவிடக்கூடாது என்ற கவலையில் நான் இந்த கருத்தை வெளிப்படுத்தினேன்.
செல்வம்
ஆதரவு நிலைப்பாடே இந்தியாவுக்கான சரியான தேர்வு: உக்ரைன் அமைச்சர்!