விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததை வரவேற்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக மகளிர் அணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாடு குறித்து இன்று (செப்டம்பர் 10) அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், “மக்கள் பிரச்னைக்காக சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளோடும் இணைவோம். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்” என்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக மின்னம்பலம் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர், “மது கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அதுதான் அதிமுகவின் கொள்கையும் கூட.
அந்த அடிப்படையில் தான் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த ஆட்சியில் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை.
தேர்தலுக்கு முன்னதாக, ‘பூரண மதுவிலக்கு’ என தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசினார்கள். போராட்டம் நடத்தினார்கள். ஆனால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியதுதான் திமுகவின் வரலாறு.
மது விற்பனையால் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 42 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரித்திருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு நல்ல நோக்கத்துடன் விசிக தலைவர் திருமாவளவன் இந்த மாநாட்டை நடத்தவுள்ளார். பொதுநோக்கம் என்ற அடிப்படையில் எங்களுக்கு அழைப்பு விடுத்தது நல்ல விஷயம் தான். வரவேற்கத்தக்கது.
அந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்பது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். அதில் நான் கருத்து கூற இயலாது” என்று கூறினார்.
மேலும் அவர், “இப்போதே திமுக கூட்டணிக்குள் ஒரு புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நீர்பூத்த நெருப்பு போலே உள்ளே புகைந்துகொண்டிருக்கிறது. அது என்று வெடிக்குமென தெரியவில்லை.
கண்டிப்பாக அந்த கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற வாய்ப்புகள் இருக்கிறது” என்றார்.
2024 தேர்தலுக்கு முன்பு இருந்தே அதிமுக இதையேதான் கூறிக்கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து அதிமுவுக்கு எந்த கட்சியும் வரவில்லையே?
பதில்: “இப்போது அவர்கள் ஆளும் கட்சியாக இருக்கிறார்கள். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் கூட்டணியை நீட்டிப்பதா இல்லையா என்று முடிவு செய்வார்கள். கண்டிப்பாக 2026 தேர்தலில் அதிமுகவுக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், எந்தெந்த கட்சிகள் வரும் என்று அந்தந்த கட்சியும் தலைமைதான் முடிவு செய்யும்”
பாஜக எதிர்ப்பு கொள்கை கூட்டணியாக ஒற்றுமையாக இருப்போம் என்று விசிக உட்பட திமுக கூட்டணியில் உள்ள எல்லோருமே சொல்கிறார்கள்… அப்படியானால் அதிமுகவின் பாஜக எதிர்ப்பு வீரியமாக இருக்குமா? நம்பலாமா? என்ற கேள்வியும் எழுகிறதே….
பதில்: “சும்மா, இதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்படி பார்த்தால் திமுகவும்தான் பாஜகவோடு 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்கள். இன்று பாஜகவோடு திமுக நெருங்கிக்கொண்டிருப்பது திமுக கூட்டணிக்கும் தெரியும். ஆனால் எங்களை பொறுத்தவரை ‘வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு’ என்ற வகையில் இனி எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை. எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்”
2021 வாக்குறுதியில் பூரண மதுவிலக்கு என்று திமுக சொல்லவில்லையே, படிப்படியாக குறைப்போம் என்றுதானே சொன்னார்கள்?
பதில்: ஸ்டாலினும், கனிமொழியும் பூரண மதுவிலக்கு என்றுதானே போர்டு பிடித்தார்கள். வாக்குறுதியாக இருந்தால் என்ன? போர்டு பிடித்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே… குடிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது தானே இவர்களது சாதனை.
அதிமுக பக்கம் விசிக வரும் என்று நம்பிக்கை இருக்கிறதா?
அரசியலில் எதற்குமே சாத்தியகூறுகள் உண்டு. அதை கட்சிகள் தான் முடியும் செய்ய வேண்டும். விசிக எங்களுக்கு எதிரி கிடையாது.
பேட்டி : கலைச்செல்வி சரவணன்
எழுத்து : பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ராயன் பட நடிகர்தான் நடிகர் விஜய் மகனின் முதல் ஹீரோ?
சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ… பணிகள் விறுவிறு!