"VCK has no greed": thirumavalan

நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!

விசிக கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். எதை எந்த நேரத்தில் அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். விசிகவுக்கு பேராசை இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் குறித்து அவரது பேரன் ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ள ஆங்கில நூலான “ஐகனோக்ளாஸ்ட்” (ICONOCLAST) என்னும் நூல் வெளியீட்டு விழா அம்பேத்கர் திடலில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது.

இதே ஆனந்த் டெல்டும்டே நேற்று விகடன் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம் இணைந்து நடத்திய ’அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக குறித்து கடுமையாக சாடியிருந்தார்.

அவர் ”தமிழகத்தில் 2026ல் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும், பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூடாது” என்று பேசியிருந்தார். இந்த பேச்சால் மீண்டும் திமுக-விசிக கூட்டணி குறித்த சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் டெல்டும்டே எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு இன்று நூலை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “அம்பேத்கர் பங்களிப்பில் இரண்டு முக்கியமானது. ஒன்று அரசியலமைப்பை உருவாக்கியது. இரண்டாவது பெளத்த தர்மத்தை தழுவியது.

அம்பேத்கர் பெளத்தம் பற்றி சொன்னார். விசிகவுக்கு அதில் என்ன நிலைப்பாடு என்று கேட்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் பேசப்படுவது ஆதி பெளத்தமும் அல்ல, அம்பேத்கர் பெளத்தமும் அல்ல. அதனால் தான் பெளத்தம் குறித்து அம்பேத்கர் தனிப்பட்ட முறையில் நூலை எழுதினார்.

நம்முடையை நோக்கங்களில் ஒன்று ஆட்சி, அதிகாரத்தை பெறுவது. ஆனால் அது யாருக்கு, எதற்கு பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது. அந்த தெளிவில்லாமல் விசிக இந்த அரசியல் களத்தில் இல்லை. தடுமாறுகிறார் திருமா என்கிறார்கள். அவர்களுக்காக பதில் சொல்லவில்லை. நீங்கள் (கட்சியினர்) ஏதோ நடக்கிறது என்று நினைத்துவிட கூடாது என்பதற்காக சொல்கிறேன்.

நம்மை சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். ஆனால் நம் சுயமரியாதையை எவனும் குறைத்து மதிப்பிட முடியாது. நம்முடைய தன்மானத்தை, கருத்தியல் நிலைப்பாட்டில் கொண்டுள்ள உறுதியை குறைத்து மதிப்பிட முடியாது. அதை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுக்கு தகுதி பெற்றவர்கள் எவரும் தமிழகத்தில் இல்லை. நாம் எவ்வாறு கருத்தியல் களத்தில் தெளிவோடு துணிவோடு இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை.

தற்காலிகமான வளர்ச்சி, புகழுக்காக அம்பேத்கரின் பாதையில் இருந்து நழுவிவிடக்கூடாது. 4 எம்.எல்.ஏக்களில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் வர வேண்டும் என்பது வளர்ச்சி கிடையாது. தனி நபர்கள் அதிகாரம் பெறுவது என்பது நமக்கு முக்கியமல்ல. விசிகவின் பணி தமிழ்நாட்டு எல்லையுடன் முடிந்துவிட கூடாது. இந்தியா முழுவதும் பரவ வேண்டும்.

விசிக கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். எதை எந்த நேரத்தில் அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். விசிகவுக்கு பேராசை இல்லை. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா என்று நாங்கள் யோசிக்க தேவையில்லை. நாங்கள் தெளிவாக இருக்கும்போது பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை” என்று திருமாவளவன் பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்

“200 அல்ல, 234 தொகுதிகளிலும் வெல்வோம்” – விஜய்யை சாடிய சேகர்பாபு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts