அட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோ பழையது அல்ல புதியதுதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை திருமாவளவன் அழைத்த விவகாரம் ஏற்கனவே திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (செப்டம்பர் 14) காலை முதல் ‘ஆட்சியிலும் அதிகாரம்’ என்று திருமாவளவன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ முதலில் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு பின் நீக்கப்பட்டது.
தொடர்ந்து, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கு ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்” என்ற கேப்ஷனுடன் மீண்டும் பதிவிடப்பட்டது. சில நிமிடங்களில் இம்முறையும் அந்த வீடியோ டெலிட் செய்யப்படட்து.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளார்களிடம் பேசிய திருமாவளவன் , “அது பழைய வீடியோ அல்ல, புது வீடியோதான். அட்மின் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார், ஒருவர் நீக்கியுள்ளார். இருவருக்கும் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. அதனால் ஏற்பட்ட குழப்பம்தான் இது.
1999ல் மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் விசிக கலந்துகொண்டது. மூப்பனாரும் இருந்தார். அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும். எளிய மக்கள் கையில் அதிகாரம் வந்தால் தான் உண்மையான ஜனநாயகம் பிறக்கும் என்று சொன்னேன். மேடையில் வைத்தே எனது கோரிக்கையை வரவேற்கிறேன் என்று மூப்பனார் கூறினார்.
அதனை நினைவுப்படுத்தி நேற்று செங்கல்பட்டு மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினேன்” என்றார்.
இப்போது அதிகார பங்கை கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “இப்போது தேர்தல் சமயம் இல்லையே. கேட்டிருந்தால் 2021ல் கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் 2026 தேர்தலில் தான் கேட்க முடியும். தற்போது எனது உரையை எடுத்துப்போட்டிருக்கிறார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. இனிதான் அவர்களிடம் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
விசிக – திமுக கூட்டணி முறிவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்களே, “அது சிலருடைய யூகம். நாங்கள் எங்கேயும் இதுபோன்று பேசவில்லை. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாடு உள்ள கட்சிதான் என்று சொன்னேன். அப்போது பத்திரிகையாளார்கள் கேட்ட கேள்விக்கு, தன்னியல்பாக அதிமுகவையும் குறிப்பிட்டு சொன்னேன்.
காவிரி, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்கிறோம். அதுபோன்று மது ஒழிப்பு பிரச்சினைக்கும் பிஜேபி உட்பட அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
ஆனால் எங்களுக்கு பாஜகவுடன் நெருடல் உள்ளது. பாமக – விசிகவுக்கும் இடையே கடந்த காலங்களில் கசப்பு இருக்கிறது.
அதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வரலாம் என்று சொன்னோம். இதை ஊதி பெரிதாக்குகிறார்கள்” என்றார் திருமாவளவன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள்….ஒருவர் கைது
36 லட்சம் மக்களுக்கு 20 லட்சம் முத்ரா கணக்குகளா? – கோவையில் குழம்பிய நிர்மலா சீதாராமன்