விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் பிரச்சினை செய்து வருகின்றனர்” என்று நமக்கு செய்தி வர, ‘விசிகவா? பாஜகவா? தெளிவா சொல்லுங்க’ என்றோம்.
”விசிக மாவட்டச் செயலாளரே பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க அதை அகற்ற அரசின் துறைகள் போராடுகின்றன” என்று மீண்டும் அழுத்திச் சொல்ல, ஆச்சரியமாக விசாரணையைத் தொடங்கினோம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, மாளிகைமேடு கிராமத்தில் உடையார், பட்டியலின, வன்னியர், ரெட்டியார் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள ஏரி புறம்போக்கு இடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு கடலூர் மேற்கு மாவட்ட விசிக செயலாளர் திராவிடமணி விநாயகர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதை காவல்துறையினரும், வருவாய் துறையினரும் தடுத்தனர்.
மீண்டும் ஜூலை 1ஆம் தேதி அதே இடத்தில் ஒரு விநாயகர் சிலையை வைத்தார். அப்போது “உரிய அனுமதியின்றி பொது இடத்தில் இதுபோன்று சிலைகள் வைக்கக்கூடாது” என்று காவல்துறை உதவியுடன் வருவாய்துறையினர் சிலையை அகற்றினர்.
இதைத்தொடர்ந்து, “விசிக மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் அக்டோபர் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் விநாயகர் சிலை அதே இடத்தில் எனது தலைமையில் நிறுவப்படும். காட்டுமன்னார் கோயில் எம்.எல்.ஏவும், விசிக மாநில பொதுச்செயலாளருமான சிந்தனை செல்வன் மற்றும் கடலூர் துணை மேயர் தாமரைசெல்வன் திறந்து வைப்பார்கள்” என்று கடலூர் மேற்கு மாவட்ட விசிக செயலாளர் திராவிடமணி அறிவித்தார்.
இதனால் வேப்பூர் போலீசார், அந்த இடத்திற்கு இரண்டு போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தினர்.
ஆனால் அறிவித்த அக்டோபர் 14ஆம் தேதிக்கு முன்னதாக அக்டோபர் 11ஆம் தேதி மக்களை அழைத்து வந்து விநாயகர் சிலையை மீண்டும் வைத்தார் திராவிடமணி.
இந்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசாரும், வருவாய் துறையினரும் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சுற்றி அமர்ந்துகொண்டு சிலையை அகற்றக்கூடாது என்று போராட்டம் செய்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை என்று காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 17) சிதம்பரம் அரசு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்காக கடலூர் மாவட்ட போலீசார் சென்றுவிட்டனர்.
போலீசார் ஆளுநர் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர் என்பதையறிந்த திராவிடமணி விநாயகர் சிலை அமைத்த இடத்தில் பீடம் அமைக்க ஏற்பாடு செய்தார். இந்த தகவல் காவல்துறைக்கு தெரியவந்து அங்கு சென்று மறித்தனர்.
இங்கு சிலை வைத்து பீடம் அமைத்தால், இவ்வழியாக டிராக்டர் உள்ளிட்ட வண்டிகளில் வயல்வெளிக்கு சென்று வர முடியாது. பிரச்சினை ஏற்படும் என்று அந்த பகுதியில் வசிப்பவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்
இந்தநிலையில், திராவிடமணி ஊர்மக்களை பேருந்தில் அழைத்துக்கொண்டு எம்.எல்.ஏ. சிந்தனை செல்வனை சந்திக்க சென்றார்.
அப்போது ஆளுநர் விழாவில் கலந்துகொண்டிருந்த எம்.எல்.ஏ சிந்தனைசெல்வன், அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் ஆதித்ய செந்தில்குமாரிடம், ‘மக்கள் வைத்த விநாயகர் சிலையை அகற்ற சொல்லி காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் முயற்சிக்கின்றனர். அதனால் மக்கள் ஆளுநரை சந்திக்க பேருந்தில் வருகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் விருத்தாசலம் ஆர்டிஓ சையது முகமதுவை அலைபேசியில் அழைத்து, ‘விசிகவினர் விநாயகர் சிலை வைத்ததை விட்டுவிடுங்கள். அதை அகற்ற முயற்சிக்க வேண்டாம். அவர்களை அழைத்து பேசுங்கள்’ என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆர்டிஓ, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், டிஎஸ்பி மோகன் ஆகியோர் திராவிடமணி மற்றும் அவருடன் வந்த சில விசிகவினரை அழைத்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆர்டிஓ சையது முகமது, ‘தற்போது வைக்கப்பட்ட சிலை. அதே இடத்தில் இருக்கட்டும், அதற்கு மேல் கட்டிடங்கள் ஏதும் கட்ட வேண்டாம். எதிர்வரும் காலத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகளோ, நீதிமன்றமோ அறிவுறுத்தினால் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிலையை அகற்ற வேண்டும்” என்று பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன், தங்களது கட்சிக் கொடியை வைக்கவும் அம்பேத்கர் சிலை வைக்கவும் அனுமதி மறுக்கிறார்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தமிழக போலீஸார் மீதே முதல்வர் ஸ்டாலின் வரை புகார் கூறினார். ஆனால் கடலூரில் வருவாய்த்துறையினர், போலீசார் எதிர்ப்பையும் மீறி விசிகவினர் விநாயகர் சிலை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது வரை விநாயகர் சிலை அமைந்திருக்கும் பகுதி பதற்றத்துக்குரியதாகவே இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தமிழ்த்தாய் வாழ்த்தில் தவிர்க்கப்பட்டதா திராவிடம்? – அடுத்த சர்ச்சையில் ஆளுநர்
வீரப்பன் நினைவு நாள்… 20 ஆண்டுகளில் மலைப்பகுதிகளில் நடந்த மாற்றம்!