Vck demand 4 seats in parliament election

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: விசிக கேட்கும் தொகுதிகள்!

அரசியல்

3 தனித்தொகுதிகள், 1 பொதுத்தொகுதி என 4 நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்க, திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக- விசிக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு குழுவிடம் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், பனையூர் பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,

“3 தனித்தொகுதிகள் , 1 பொதுத்தொகுதி  என நான்கு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்கான உத்திகள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

2019-ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இயங்கி வருகிறது. அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்தால், அது திமுக கூட்டணியாக தான் இருக்கும். எந்த மாநிலத்திலும் இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகள் பயணிப்பது இல்லை.

தமிழகத்தில் பாஜக தலைமையில் அதிமுக உள்பட கூட்டணி உருவானது. ஆனால், அது எப்படி சிதறிக்கிடக்கிறது என்பதை நாம் அறிவோம்.

அவ்வாறு இல்லாமல், கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய கூட்டணியாக திமுக கூட்டணி இயங்கி வருகிறது. மேலும், அது இந்தியா கூட்டணி என்கிற அளவிற்கு விரிவடைந்திருக்கிறது.

இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றை செயல்திட்டத்தை முன்வைத்து இந்தியா கூட்டணி இயங்கி வருகிறது. இந்தியா கூட்டணி உருவானதில் விசிகவுக்கு பங்கு இருக்கிறது.

இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கைகளை அண்ணன் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவிடம் முன் வைத்துள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் ஏழு தனித்தொகுதிகள் உள்ளன. அதில் வடமாவட்டங்களில் இருக்கிற சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை குறிப்பிட்டு அதில் மூன்று தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேபோல, பெரம்பலூர், மயிலாடுதுறை,கள்ளக்குறிச்சி ஆகிய பொதுத்தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடுமா அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமா, “தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஆளுநர் உரை ஊசிப் போன உணவு பண்டம்” : எடப்பாடி விமர்சனம்!

சபாநாயகர் அவை மரபை மீறியதால் ஆளுநர் வெளிநடப்பு: நயினார் நாகேந்திரன்

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *