திருமாவுக்கு கூட்டணி கட்சிகள் பிரஷர்… விஜய்யின் பேச்சுக்கு விசிக எதிர்ப்பு!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் திருமாவளவனுக்கு பிரஷர் கொடுக்கிறார்கள். திருமாவளவன் இங்கு வரவில்லை என்றாலும் அவரது மனசு நம்மோடு தான் இருக்கும்” என்று பேசியிருந்தார்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு விசிக முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளனர்.

விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “எங்கள் தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட, விஜய் திருமாவைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிகவோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது.

தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள் .

‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

விசிக பொதுச்செயலாளரும் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “விஜய்யுடன் திருமா மேடை ஏறக்கூடாது என்று எந்த இடத்திலும் திமுக எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கூட்டணி நிர்பந்தத்தால் தான் நூல் வெளியீட்டு விழாவில் திருமா கலந்துகொள்ளவில்லை என்று விஜய் கூறுவது திருமாவை கொச்சைப்படுத்தும் கருத்து.

என்னுடைய 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அம்பேத்கர் நினைவு நாளில் அவருடைய நூல் வெளியீட்டு விழாவை சாதாரண தேர்தல் கூட்டணிக்காக விஜய் பயன்படுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மனம் கனமாக இருக்கிறது. இது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல” என்றார்.

விசிக துணை பொதுச்செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, விஜய் படத்தில் பேசிய, “யார் யாரு மனசுல என்னென்ன நினைக்குறாங்கன்னு தெரிஞ்சா தான் எந்த பிரச்சனையும் இல்லையே… அது தெரியாம தான எல்லாமே பிரச்சனையா இருக்குது” என்ற டயலாக்கை அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.

அதேபோல, “வேலை வந்து ஒருவன் இங்கே மேலே வந்துட்டா அவன் ஆடும் ஆட்டம் தாங்க முடியலை” என்ற சத்யராஜ் பாடலையும் பதிவிட்டுள்ளார்.

மேலும், “உண்மையான உணர்வு கொண்ட சிறுத்தைகளுக்கு உத்தரவு ஏதும் தேவையே இல்லை. “தாய்ச்சொல்” ஒன்றே போதும். உள்நஞ்சை கக்கும் ஊன நெஞ்சு ஊடகங்கள் வாழ்க” என குறிப்பிட்டு ஆதவ் ஆர்ஜூனாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

கூட்டணி கட்சிகள் நிர்பந்தத்தால் தான் நூல் வெளியீட்டு விழாவில் திருமா கலந்துகொள்ளவில்லை என்று விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 செஞ்சிலுவைச் சங்கக் கட்டடம் மீது தாக்குதல்: 22 பேர் பலி!

T20 Ranking: முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார், முன்னேறிய வீரர்கள் யார்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts