திருச்சி எஸ்.பி வருண்குமார் நாம் தமிழர் கட்சியினர் தன் மீதும் தனது குடும்பத்தார் மீதும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் அவதூறுகள் சம்பந்தமாக 8 பக்கங்கள் கொண்ட நீண்ட அறிக்கையை இன்று(ஆகஸ்ட் 24) வெளியிட்டுள்ளார்.
அதில் தற்காலிகமாக தானும், தனது மனைவி வந்திதா ஐபிஎஸ் சும் சோஷியல் மீடியாவில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
பின்னணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாகப் பாடல் பாடிய விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
“இந்த கைதுக்கு எஸ்.பி.வருண்குமார் தான் காரணம், அவருக்குத் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் சமுதாயத்தினரைப் பிடிக்காது” என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து நாதக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமூகவலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுத்ததாக வருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 நபர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
மேலும் நாதக கட்சி நிர்வாகிகள் கண்ணன் மற்றும் திருப்பதி ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
வருண்குமார் விளக்கம்
இந்த நிகழ்வுகள் குறித்து எஸ்.பி.வருண்குமார் இன்று (ஆகஸ்ட் 24) தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில் நாம் தமிழர் கட்சி என்றோ, சீமான் என்றோ பெயர் குறிப்பிட வில்லை என்றாலும் அவர்கள் பற்றியே விரிவாக விளக்கியிருக்கிறார் எஸ்.பி. வருண்குமார்.
அதில் “நான் வருண்குமார் வீரசேகரன் IPS, பல் மருத்துவருக்கான படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறை மேல் உள்ள பற்று காரணமாக 2010-ம் ஆண்டு UPSC குடிமைப்பணிகள் தேர்வு எழுதினேன். அதில், அகில இந்திய அளவில் 3-ம் இடத்தை பிடித்திருந்தாலும், IPS -ஐ தேர்ந்தெடுத்தேன்.
2011-ம் ஆண்டு IPS தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதிதீவிரப்படை, சென்னையிலும் பணிபுரிந்தேன். பின்னர் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று குடிமைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னையில் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை மண்டலம் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளேன்.
தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகக் கடந்த ஒரு வருடமாக பணிபுரிகிறேன். எனது 13 ஆண்டுக்கால IPS வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிலும் Outstanding Rating மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளேன்.
இன்று ஒரு மாவட்ட பொறுப்பில் இருந்தாலும் கூட, இராமநாதபுரத்தில் ஒரு எளிமையான பின்னணியிலிருந்து வந்தவன் நான். எனது தகப்பனார் வழி தாத்தா ஒரு தபால் காரராக பணிபுரிந்தார். எனது தாய்வழி தாத்தா திருச்சியில் விவசாய விதை வியாபாரம் செய்து வந்தார். இப்பேர்ப்பட்ட சாமானிய சூழலிலிருந்து வந்த நான் பெண்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் போன்ற சாமானியர்களின் பிரச்சனைகளைப் போக்க வேண்டும் என்று தீவிர முனைப்பில் செயலாற்றி வருகிறேன் “ என்று கூறியிருக்கும் வருண்குமார்… தனக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் இடையிலான திருவள்ளூர் விவகாரத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
“ 2021ஆண்டு YouTuber ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த YouTuber-ஐ கைது செய்து, பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.
சமீபத்தில், அதே YouTuber பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் Cyber Crime காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த YouTuber சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னை கடுமையாக (சில சாதி பெயர்களை குறிப்பிட்டு) சாடினார். அது விமர்சனத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்திலிருந்தது. எனவே, அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன்.
நான் சட்டப்படி இந்த Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் X தளத்தில் பரப்பினர்.
இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது.
நானும் எனது மனைவி வந்திதா பாண்டேவும் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம்.
என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பிலிருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள்தான். ஒரு சாதாரண தகப்பன் மற்றும் தாயாக இது எங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் ஒரு அளவிற்குப் பாதித்துள்ளது.
நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்குப் பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த X இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம்.
ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலிக் கணக்குகளையும் அதன் பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களைக் கூலிக்காகத் தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் சட்டப்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்பதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறேன். இதேபோக இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு (Civil & Criminal Defamation) தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சமூக தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய அவதூறு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், போலீஸ் எஸ்.பி.யாக இருக்கும் தம்பதியே சோஷியல் மீடியாவை விட்டு விலகுகிறோம் என்று சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான் திருச்சி எஸ்பி வருண்குமார் அறிக்கை பற்றி பதிலளித்துள்ளார்.
திருவாரூர் பொங்கு சனீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “என் மீது 138 வழக்குகள் இருக்கு. அதை அதிகமாக்கி என் மீது 200 வழக்கு போட அவர் முயற்சி பண்றாரு. சீமான் டபுள் செஞ்சுரி அடிச்சான்னு வரலாறுல வரணுமில்ல. நீங்க ஐபிஎஸ்-சா இயங்கணும். திமுகவின் ஐ.டி.விங்குல வேலை செய்யக் கூடாது. நான் பாக்காத வழக்கா? நீ அதிகாரத்துல ஒரு புள்ளி, இந்த அதிகாரத்தையே எதிர்த்து நான் சண்டை செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்திய ஒன்றிய அரசு, இந்த மாநில அரசு எல்லாத்தையும் எதிர்த்து சண்டை செஞ்சுக்கிட்டிருக்கேன். நீ எனக்கு எம்மாத்திரம்? ஓரமா நின்னு விளையாடிட்டு போகணும். நீ எஃப்.ஐ.ஆர். போடு என்னத்தையாவது போடு. என் வீட்டுல ஐந்தாறு குப்பைக் கூடை இருக்கு. கிழித்துப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்று பதிலளித்துள்ளார் சீமான்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….