பிலிபித் மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வருண்காந்திக்கு பாஜக வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து அத்தொகுதி மக்களுக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாக இன்று (மார்ச் 28) கடிதம் எழுதியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகோதரர் சஞ்சய் காந்தி. இவரது மனைவி மேனகா காந்தி. இத்தம்பதியினரின் மகன் தான் வருண் காந்தி. 1980 இல் வருண் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார்.
பாஜகவில் மேனகா காந்தி!
அதன்பின்னர் 1988ஆம் ஆண்டு ஜனதா தளத்தில் இணைந்த மேனகா காந்தி, 1999ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபித் தொகுதியில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அதன்பின்னர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிலிபித் தொகுதியில் முதன்முறையாக அவரது மகன் வருண் காந்தி பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங்கை விட 2,81,501 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் வருண்.
பிலிபித் தொகுதியில் தொடர் வெற்றி!
அதனைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் பிலிபித் தொகுதியில் மேனகாவும், சுல்தான்பூர் தொகுதியில் வருணும் போட்டியிட்டு வென்றனர்.
பின்னர் 2019ஆம் ஆண்டில் பிலிபித் தொகுதியில் வருணும், சுல்தான்பூரில் மேனகாவும் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றனர். இதில் வருண்காந்தி 2,55,627 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014, 2019 என இரு மக்களவைத் தேர்தலிலும் தாய், மகன் இருவருக்கும் போட்டியிட பாஜக வாய்ப்பளித்து வந்த நிலையில், இந்த 2024 மக்களவைத் தேர்தலில் மேனகா காந்திக்கு மட்டும் அவர் எம்.பியாக உள்ள உத்தரப்பிரதேசம் சுல்தான்பூரில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
வருண்காந்திக்கு சீட் மறுப்பு!
அதே நேரத்தில் பிலிபித் தொகுதியில் பாஜக எம்பியாக அவரது மகன் வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஜிதின் பிரசாத் பெயரை பிலிபித் தொகுதி வேட்பாளராக பாஜக அரசு அறிவித்துள்ளது.
பிலிபித் தொகுதியில் அதிகபட்ச வாக்கு வித்தியாச வெற்றியுடன் தொடர்ந்து கோலோச்சி வந்த மேனகா மற்றும் வருண் காந்தி இருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
சுயேட்சையாக போட்டி?
இதற்கிடையே கடந்த சில வருடங்களாக பாஜகவுக்கு எதிராக வருண்காந்தி கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு பாஜக சீட் கொடுக்க மறுத்ததாக கூறப்பட்டது. எனவே அவர் இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று அவரது தரப்பில் தகவல் வெளியாகி வந்தன.
முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகளில் பிலிபித் தொகுதியும் ஒன்று. எனவே வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான நேற்றும் வருண் காந்தி மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதன்மூலம் அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கலாம் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வருண்காந்தி தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதுவும் கூறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக அத்தொகுதி மக்களுக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்!
அதில், “இன்று நான் இந்தக் கடிதத்தை எழுதும் போது எண்ணற்ற நினைவுகள் என்னை உணர்ச்சிவசப்பட செய்கின்றன. 1983ல் அம்மாவின் விரலைப் பிடித்துக் கொண்டு முதன்முதலாக பிலிபித் நகருக்கு வந்த 3 வயது சிறுவனுக்கு ஒரு நாள் இந்த நிலம் தனது பணியிடமாக மாறும், இங்குள்ளவர்கள் தனது குடும்பமாக மாறுவார்கள் என்று அவருக்கு எப்படி தெரியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பிலிபித் மக்களுக்கு பல ஆண்டுகளாக சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பிலிபித்திடமிருந்து நான் பெற்ற இலட்சியங்கள், எளிமை மற்றும் கருணை ஆகியவை எம்.பி.யாக மட்டுமின்றி ஒரு நபராகவும் எனது வளர்ப்பிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பை உடையது. உங்கள் பிரதிநிதியாக இருப்பது என் வாழ்வின் மிகப் பெரிய கவுரவம். மேலும் உங்களது நலன்களுக்காக நான் எப்போதும் போராடி வருகிறேன்.
எம்.பி.யாக எனது பதவிக்காலம் முடிவடைந்தாலும், பிலிபித்துடனான எனது உறவை எனது இறுதி மூச்சு வரை நிறுத்த முடியாது. எம்.பி.யாக இல்லாவிட்டாலும், ஒரு மகனாக, என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். எனது வீடு மற்றும் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும். சாமானியர்களின் குரலை உயர்த்தவே அரசியலுக்கு வந்த நான், இன்று என்ன விலை கொடுத்தாலும் இந்த பணியை தொடர்ந்து செய்ய உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்.
எனக்கும் பிலிபித்துக்கும் இடையிலான உறவு, எந்த அரசியல் தகுதிக்கும் மேலான அன்பும் நம்பிக்கையும் கொண்டது. நான் உங்களுடன் இருந்தேன், இருக்கிறேன் மற்றும் என்றும் இருப்பேன்” என்று வருண்காந்தி தெரிவித்துள்ளார்.
வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு!
இதற்கிடையே பாஜகவில் சீட் கிடைக்காத வருண் காந்தியை காங்கிரஸில் சேர அக்கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர், “வருண் காந்தி காங்கிரஸில் சேர வேண்டும், அவர் இணைந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். அவர் ஒரு மக்கள் செல்வாக்குள்ள தலைவர் மற்றும் நன்கு படித்த அரசியல்வாதி. அவரது பாஜக அரசு மீது வெளிப்படையாக குற்றஞ்சாட்டி வந்தார். மேலும் அவர் காந்தி குடும்பத்துடன் இன்று நல்ல உறவை வைத்துள்ளார். இதுதான் பாஜக அவருக்கு டிக்கெட் கொடுக்காததற்கு காரணம். எனவே வருண் காந்தி இப்போது காங்கிரஸில் சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று ஆதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா